காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர். எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினத்தில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

* செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்): உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தவர் காமராஜர். தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்ற அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம்.

* நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜ தலைவர்): கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் என்றும் மக்களால் போற்றப்பட்டவர். இந்த நாளில், கர்ம வீரர் காமராஜரின் நினைவைப் போற்றுவோம்.

* அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர் காமராஜர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் அவர். ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி விட்டு, அதை செய்ய வேண்டியது எனது கடமை என்று கூறிய பெருமகனார்.

* கமல்ஹாசன் (மநீம தலைவர்): காந்தி, நேரு என்கிற பேராளுமைகளோடு இணைந்து இந்த நாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர். நாட்டை ஆளும் வாய்ப்பே வந்தபோதும், தன்னைப் பின் நிறுத்திக்கொண்டு தலைவர்களை உருவாக்கியவர். லட்சியவாத அரசியலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் காமராஜர். அரசியல் மாண்புக்கும் நிர்வாக ஆளுமைக்கும் இக்காலத்திலும் சான்றாக நிற்கும் பெருந்தலைவரின் பெயரை வாழ்த்தி நிற்போம். அவர்தம் கொள்கைகளை நினைவில் ஏந்துவோம்.

* கல்விக்கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம்: முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டு கல்வி கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று. கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: