×

மகளிர் திட்டங்களை கூறி திமுக உறுப்பினர் சேர்க்கை

சேலம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில், மகளிர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் திமுகவினருக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஓரணியில் தமிழ்நாடு எனும் இயக்கத்தின் மூலம், வீடு, வீடாக சென்று மக்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம் வடக்கு, மேற்கு, தெற்கு, ஓமலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில், மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.

இதில் சேலம் மாநகர பகுதியில், திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த நேற்று பகுதி வாரியான ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் ராஜேந்திரன் நடத்தினார். அரிசிபாளையம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் பகுதிகளில் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை ஒவ்வொரு நிர்வாகிகளும், தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வீடு, வீடாக சென்று மக்களிடம் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, திமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும். குறிப்பாக மகளிர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைத்து திமுக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்,’ என்றார்.

இக்கூட்டங்களில் சேலம் தெற்கு தொகுதி பார்வையாளர் பார்.இளங்கோவன், மாநகர அவைத்தலைவர் முருகன், பொருளாளர் ஷெரீப், துணைச்செயலாளர் கணேசன், அம்மாபேட்டை மண்டலக்குழு தலைவர் தனசேகர், பகுதி செயலாளர்கள் மணமேடு மோகன், ஜெய், மாநகராட்சி கவுன்சிலர்கள் மஞ்சுளா கணேசன், வக்கீல் தெய்வலிங்கம் மற்றும் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மகளிர் திட்டங்களை கூறி திமுக உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Salem ,Minister ,Rajendran Thimugavinar ,Tamil Nadu ,Movement ,Orani ,Chief Minister of ,Tamil ,Nadu ,K. ,Stalin ,Assembly Constitution ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்