×

ஃபிபா கிளப் கால்பந்து: செல்ஸீ சாம்பியன்

நியுயார்க்: உலகின் முக்கியத்துவம் வாய்ந்த 32 கால்பந்து அணிகள் மோதிய ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தன. இந்நிலையில், செல்ஸீ – பிஎஸ்ஜி அணிகள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இப்போட்டியில் துவக்கம் முதல் செல்ஸீ அணி வீரர்கள் சூறாவளியாய் சுழன்று ஆடினர். அந்த அணியின் கோல் பால்மர், போட்டியின் 22வது நிமிடத்திலும், 30வது நிமிடத்திலும் இரு கோல்களை போட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து, ஜாவோ பெட்ரோ, 43வது நிமிடத்தில் அணியின் 3வது கோலை போட்டு வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தார். போட்டியின் கடைசி நிமிடம் வரை பிஎஸ்ஜி அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்த செல்ஸீ அணி, ஃபிபா கிளப் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த அணிக்கு ரூ. 1080 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. வெற்றிக் கோப்பையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவும் வழங்கினர்.

The post ஃபிபா கிளப் கால்பந்து: செல்ஸீ சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : FIFA Club Football ,Chelsea ,New York ,FIFA Club World Cup football ,United States ,PSG ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...