லாக்கரில் இருந்த ரூ.7 லட்சம் கொள்ளை; நடிகையை தள்ளிவிட்டு தப்பிய சமையல்காரர்: போலீஸ் கைவிரித்ததால் அதிர்ச்சி


மும்பை: லாக்கரில் வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சமையல்காரர், நடிகையை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல டிவி நடிகை காஷிஷ் கபூர் என்பவர் தனது தாயின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக வீட்டில் உள்ள லாக்கரில் 7 லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்தார். அவர் சிங்கப்பூர் செல்லவிருந்ததால், அதற்கு முன் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், வீட்டில் இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். தனது வீட்டில் பணம் திருடு போனது குறித்து ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

பணம் காணாமல் போனதை தொடர்ந்து, தனது சமையல்காரர் வீட்டை விட்டு சற்று நேரத்திற்கு முன்புதான் வெளியேறியது காஷிஷுக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, அவரது பாக்கெட்டுகளை சோதனை செய்யும்படி கூறியுள்ளார். அவர் பலமுறை மறுத்ததால், காஷிஷ் சத்தமிட்டு சோதனை செய்தபோது, அவரது பாக்கெட்டில் 50,000 ரூபாய் பணக்கட்டு இருந்ததை கண்டுபிடித்தார். காஷிஷ் தனது செல்போனை எடுத்து எதையாவது செய்வதற்குள், அந்த சமையல்காரர் காஷிஷின் கைகளைப் பிடித்து சுவரில் சாய்த்து, யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த நபரை பிடிப்பதற்குள் அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட காஷிஷ், சமையல்காரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் திருடுபோன பணம் திரும்ப கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று போலீசார் கூறியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

The post லாக்கரில் இருந்த ரூ.7 லட்சம் கொள்ளை; நடிகையை தள்ளிவிட்டு தப்பிய சமையல்காரர்: போலீஸ் கைவிரித்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: