சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், நாட்டின் பெரும்பாலான அனல் மின் நிலையங்களுக்கு, சல்பர் டையாக்சைடு கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவும் கட்டாயத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த நிலைப்பாட்டின் விளைவாக, நாட்டின் சுமார் 600 அனல் மின் உற்பத்தி அலகுகளில் வெறும் 11% மட்டுமே சல்பர் டையாக்சைடு கட்டுப்பாட்டு (எப்ஜிடி) அமைப்புகளைக் கட்டாயமாக நிறுவ வேண்டும். கட்டாய வரம்பிற்குள் வரும் இந்த அலகுகள் தலைநகர் டெல்லி மற்றும் மக்கள் தொகை 10 லட்சத்தைத் தாண்டிய நகரங்களின் 10 கி.மீ சுற்று வட்டத்திற்குள் உள்ள நிலையங்கள் ஆகும்.
மேலும் 11% அலகுகள் தீவிர மாசுபட்ட பகுதிகள் மற்றும் மாசுபாட்டில் குறைபாடுள்ள நகரங்களில் உள்ளவை ஆகும். மீதமுள்ள 78% அனல் மின் நிலையங்கள் இப்போது சல்பர் டையாக்சைடு கட்டுப்பாட்டு (எப்ஜிடி) அமைப்புகளை நிறுவுவதிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவப்படும் ஒரு அனல் மின் நிலையத்தின் தாக்கம் 200 கி.மீ தூரம் வரை பரவக்கூடியது. அனல் மின் நிலையம் அமைந்துள்ள எல்லைகளைக் கடந்து அது மாசுபாட்டை ஏற்படுத்தும். உயரமான குழாய்கள் மூலம் வெளியேறும் புகை, சல்பர் டையாக்சைடின் தாக்கத்தைக் குறைக்கும் தீர்வல்ல. ஒன்றிய அரசின் இந்த முடிவால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நுரையீரல் மற்றும் இதய நோய்களுக்கு ஆட்படக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவது, சுற்றுச்சூழல் நீதிக்கும், மக்களின் உடல்நலத்திற்கும் எதிரானதாகும். ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அனல் மின் நிலையத்துக்கான மாசு கட்டுப்பாட்டு விதிமுறை தளர்வு; மோசமான விளைவை ஏற்படுத்தும்: ஜவாஹிருல்லா கடும் கண்டனம் appeared first on Dinakaran.
