குளித்தலை பஸ்நிலையம் அருகே தடுப்புசுவர் இல்லாத வாய்க்கால் பாலத்தில் ஆபத்தான பயணம்

*போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குளித்தலை : குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் பாலத்தில் விபத்து ஏற்படாத வண்ணம் பாலத்தை அகலப்படுத்தி கைப்பிடி சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்கால் மாயனூரில் இருந்து சித்திரமய், சிந்தலவாடி, லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், வதியம், எல்ல அரசு பாலம் , சுங்க கேட், கடம்பர்கோவில், சண்முகானந்தா தியேட்டர், பெரிய பாலம், மருதூர், தண்ணீர்பள்ளி, குமாரமங்கலம், பெட்டவாய்த்தலை வரை சென்று அங்கு காவிரியில் கலந்து செல்கிறது. இந்த தென்கரை வாய்க்காலில் திருச்சி-கரூர் புறவழிச்சாலையில் இருந்து குளித்தலை பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும் என்றால் இந்த குறுகிய பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சைக்கிள், இருசக்கர வாகனத்திலும, நடந்தும் சென்று வருகின்றனர். தென்கரை வாய்க்கால் பாலம் சிறியதாக உள்ளது. பாலம் அமைக்கப்பட்டபோது பாதுகாப்புக்காக இரு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாய்க்கால் பாலத்தை கடந்து சென்று வந்தனர்.

பின்னர் நாளடைவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. பல ஆண்டுகள் ஆகியும் தடுப்புசுவர் புதிதாக கட்டுவதற்கு சம்மந்தப்படட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தென்கரை வாய்க்கால் பாலம் இருசக்கர வாகனம், சைக்கிளில் கடந்து செல்பவர்களின் நிலை கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் உள்ளது. பகல் பொழுதில் பாலத்தை கடந்து சென்று விடலாம்.

ஆனால் இரவு நேரங்களில் இந்த பாலத்தை கடந்து செல்வது மிகவும் ஆபத்தானதாக இருந்து வருகிறது. தற்போது வாய்க்காலில் செல்வதால் சிறிது தடுமாறினாலும் வாய்க்காலில் தான் விழ வேண்டும். 10 அடி உயரம் உள்ள வாய்க்காலில் விழுந்து ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது.

24 மணி நேரமும் போக்குவரத்து பகுதியாக உள்ள குளித்தலை பஸ் நிலையம் அருகே இருக்கும் தென்கரை வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்தி இருபுறமும் கைப்பிடி சுவர் அமைக்க ஆற்று பாதுகாப்பு நீர்வழி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைத்துள்ளனர்.

The post குளித்தலை பஸ்நிலையம் அருகே தடுப்புசுவர் இல்லாத வாய்க்கால் பாலத்தில் ஆபத்தான பயணம் appeared first on Dinakaran.

Related Stories: