குப்பைகளுக்கு தீ வைப்பு; சுகாதார சீர்கேடு அபாயம்

*விழிப்புணர்வோடு செயல்பட அறிவுறுத்தல்

திருப்பூர் : திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக 60 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது.

தொழில் நகரம் என்பதால் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் அவர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்து பெறப்படுகிறது.

இவை திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நுண் உரமாக்கும் மையங்களில் இயற்கை உரங்களாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பை உள்ளிட்டவை தரம் பிரிக்கப்பட்டு சிமெண்ட் சீட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் குப்பைகளை கொட்டி செல்ல ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவற்றையும் தூய்மை பணியாளர்கள் லாரி மற்றும் ஜேசிபி மூலம் அவ்வப்போது அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அவ்வாறு சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக அதில் உள்ள மக்கள் மற்றும் மக்காத குப்பைகள் தீயில் எரிந்து சேதமடைகிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரியும்போது அதிலிருந்து வரும் புகை அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இது எதிரே வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயத்தை உருவாக்குவது மட்டுமல்லாது இந்த புகையை சுவாசிக்கும் பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளையும் உண்டாக்குகிறது.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர குப்பைகள் கொட்ட கூடாது என பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைத்திருந்தும் அதையும் மீறி குப்பைகள் கொட்டப்படுவதும், அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றி சென்றாலும் கூட பொதுமக்களிடம் போதியை விழிப்புணர்வு இல்லாததால் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதும், அதை தீ பற்றி எரியும்போது மக்களுக்கே ஆபத்தான சூழ்நிலை உண்டாவதும் ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகத்தோடு பொதுமக்களும் இணைந்து விழிப்புணர்வோடு சாலை ஓரங்களில் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சி பணியாளர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும். அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை கொட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post குப்பைகளுக்கு தீ வைப்பு; சுகாதார சீர்கேடு அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: