×

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சின்னர் புதிய சாதனை: முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை பெற்றார்


லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் 22 வயது அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்புடன் தொடங்கிய இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 3 செட்டையும் 6-4, 6-4, 6-4 என கைப்பற்றி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.35 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை அவர் படைத்தார். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பைனலில் அல்காரசிடம் அடைந்த தோல்விக்கு சின்னர் நேற்று பழிதீர்த்துக்கொண்டார்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்த சின்னருக்கு இது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். வெற்றிக்கு பின் சின்னர் கூறுகையில், “விம்பிள்டனை வெல்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம். இது உண்மையில் எளிதாக இருந்ததில்லை என்பதால் நான் மிகவும் பெருமைப்படும் பகுதி இது’’ என்றார். ரன்னரான அல்காரசுக்கு ரூ.17.5 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.
இகா முன்னேற்றம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக், தரவரிசையில், 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பெலாரசின் அரினா சபலென்கா முதல் இடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் 2வது இடத்திலும் உள்ளனர். விம்பிள்டன் ரன்னரான அமெரிக்காவின் அமண்டா 5 இடம் முன்னேறி 7வது இடத்தில் உள்ளார்.

The post விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சின்னர் புதிய சாதனை: முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Sinner ,Wimbledon tennis series ,London ,Grand Slam series ,Janik Sinner ,Italy ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...