முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வீராணம் ஏரியை அதிகாரிகள் கண்காணிப்பு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.

மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப வினாடிக்கு 73 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் வீராணம் ஏரி நடப்பாண்டில் மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது.

இதைதொடர்ந்து நேற்று வீராணம் ஏரியின் சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கந்தகுமாரன் பகுதியில் உள்ள மெயின் மதகான ராதா மதகு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கனஅடி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய தேவைக்காகவும் ஏரி நீர் பயன்படுத்தப்படும்.

மேலும் வடவாறு வழியாக ஏரிக்கு 1137 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விஎன்எஸ் மதகு வழியாக 360 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர், என்றார். ஆய்வின் போது, உதவி பொறியாளர் சிவராஜ் உடன் இருந்தார்.

The post முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வீராணம் ஏரியை அதிகாரிகள் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: