ராமேஸ்வரம் : தினசரி நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டு செல்லும் கலாம் தேசிய நினைவிடத்தில் செல்போன் லாக்கர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் தேசிய நினைவகம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ளது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலம் அமைக்கப்பட்ட இந்த நினைவகத்தின் உள்ளே கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலைகள், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், விருதுகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தேசிய நினைவகத்தை பார்வையிட எவ்வித கட்டணமும் இன்றி பார்வையாளர்கள் தற்போது வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
பல்வேறு காரணங்களுக்காக உள்ளே செல்லும் பார்வையாளர்கள் கேமரா, செல்போன், பேக், உணவு மற்றும் புகையிலை பொருட்களுடன் செல்ல தடை உள்ளது. இதனால் நுழைவாயிலில் உள்ள பணியாளர்கள், போலீசாரின் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில் பார்வையாளர்கள் பலரும் இங்குள்ள நடைமுறை தெரியாமல் கையில் வைத்திருக்கும் செல்போனுடன் நினைவிடத்தை பார்வையிட வருகின்றனர். மெயின் கேட்டில் சோதனையின் போது கொண்டு வந்த செல்போனை தங்கள் வந்த வாகனத்தில் வைத்து விட்டு செல்கின்றனர். தனி வாகனம் இன்றி அரசு போக்குவரத்தை பயன்படுத்தி வருபவர்கள் நினைவிடம் எதிரே உள்ள தனியார் செல்போன் லாக்கரில் வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் இந்த செல்போன் லாக்கர்கள் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இன்றி, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இயங்கி வருவதால் அதிக விலை மதிப்புள்ள செல்போன்களை கொண்டு வரும் பார்வையாளர்கள் பலரும் தனியார் செல்போன் லாக்கரை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் குடும்பமாக வருபவர்கள் அனைத்து செல்போனையும் உடன் வந்த ஒருவரிடம் கொடுத்து விட்டு உள்ளே செல்கின்றனர். அனைவரும் பார்வையிட்டு வந்த பிறகு செல்போனை பாதுகாத்து இருந்தவர் அதன் பிறகு பார்வையிட செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பார்வையாளர்கள் செலவிடும் நேரம் இரட்டிப்பாகிறது. ராமேஸ்வரம் வருகை தரும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தவறாது கலாமின் தேசிய நினைவகத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இதில் பலரும் செல்போனை பாதுகாப்பதற்கு பணத்தையும், நேரத்தையும் செலவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே (டிஆர்டிஓ) நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு கலாம் தேசிய நினைவிடத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைத்து விட்டு செல்லும் வகையில் செல்போன் லாக்கர் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கலாம் தேசிய நினைவிடத்தில் செல்போன் லாக்கர் வசதி ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.
