தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் தன்னம்பிக்கையோடு தொழில்முனைவோராக உருவாக வேண்டும்

*தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி : தமிழகத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் தன்னம்பிக்கையோடு தொழில் முனைவோராக உருவாகினால் உறுதியாக வெற்றி கிடைக்கும் என தூத்துக்குடியில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திட்டத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசிய கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமாக பல்வேறு தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களை தொழில் முனைவராக உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் புத்தாக்க மையம் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ரைசிங் தூத்துக்குடி என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளித்தது.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டெம்ப் பூங்காவில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 44 பேருக்கு ஒரு நாள் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வாறு பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் விழா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கனிமொழி எம்.பி., பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கிப் பேசுகையில் ‘‘இளைஞர்கள் வேலை தேடி எங்கும் செல்லக்கூடாது இது போன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாக வேண்டும். தாங்கள் தொழில் முனைவோராக உருவாவதோடு தங்களைப் போன்ற பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும்.

இதற்கு தேவையான உதவிகளை செய்து தருவோம். தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற ஆசை விருப்பம் இருக்கின்ற போதிலும் பலருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் தன்னம்பிக்கையோடு தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகில் உறுதியாக வெற்றி கிடைக்கும்’’ என்றார். நிகழ்வில் தூத்துக்குடி ஆர்டிஓ பிரபு, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர் ரெங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் தன்னம்பிக்கையோடு தொழில்முனைவோராக உருவாக வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: