அரக்கோணம் அருகே பரபரப்பு பைக் மீது கார் மோதி அண்ணன், தம்பி பலி

*உறவினர்கள் சாலை மறியல்

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது, மகன்கள் சந்தோஷ்(35), கார்த்திக்(28). இதில், சந்தோஷ் சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தும், கார்த்திக் டிராவல்ஸ் ஓட்டியும் வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சகோதரர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இருந்து பைக்கில் சாலை கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, எஸ்ஆர்.கண்டிகை அருகே சென்று கொண்டிருந்த போது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

சந்தோஷை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித் டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.முன்னதாக தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் இறங்கி சிறிது தூரம் சென்று நின்று உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த இறந்த நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி, அரசு வேலை வாய்ப்பு போன்றவை வழங்க வேண்டும் எனக்கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று உறவினர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அரக்கோணம் தாசில்தார் வெங்கடேசன், டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சோளிங்கர்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சுமார் 3மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அரக்கோணம் அருகே பரபரப்பு பைக் மீது கார் மோதி அண்ணன், தம்பி பலி appeared first on Dinakaran.

Related Stories: