கல்லணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

*காவிரி ஆற்றில் ஆனந்த குளியல்

திருக்காட்டுப்பள்ளி : கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகளால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது.

இங்கு கடந்த மாதம் டெல்டா விவசாய பாசனத்திற்காக காவேரி, ஆற்றில், வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விவசாய பாசனத்திற்காக அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பிரிந்து சென்று கொண்டிருக்கிறது.

கல்லணையை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சராசரி நாட்களை விட விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கல்லணையை நோக்கி படையெடுக்கின்றனர்.

கல்லணையில் உள்ள வரலாற்று புராதன சின்னங்கள், மணிமண்டபம், காவிரித்தாய், சோழன் சிலை, அகத்திய முனிவர் சிலைகள் ஐந்து தலை கொண்ட நாக பாம்பின் சிலைகள் மற்றும் கரிகாலன் யானை மீது அமர்ந்திருக்கக் கூடிய கம்பீரமான சிலை உள்ளிட்ட சிலைகளை கண்டு மகிழ்கின்றனர்.

அங்குள்ள சிறுவர், சிறுமிகள் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்து ஆனந்த களிப்பில் திழைக்கிறார்கள். அதேபோல கரிகாலன் பூங்காவில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் சென்று பொழுதுபோக்கு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரின் அழகினை கண்டு மகிழ்வதோடு, ஆபத்தினை உணராமல் நீரில் குதித்து குளித்து வருகின்றனர். காவிரி, மற்றும் கல்லணைக் கால்வாய், ஆறுகளில் ஆழம் அதிகமாகவும், நீரின் போக்கு அதிக வேகமாகவும் இருப்பதால் யாரும் ஆறுகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என நீர்வளத்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் அதிக தண்ணீர் செல்வதால், ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாமல், அலட்சியமாக சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்து வருகின்றனர். காவிரி ஆற்றின் பாலத்தின் மீது வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துக்கிடக்கிறது.

அதனை சரி செய்வதற்கு போதிய காவல்துறையினர் இல்லை. சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லணையில் குளிப்பவர்களை தடுப்பதற்காகவும் வாகன போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் காவல் துறையினரை நியமிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post கல்லணையில் குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: