பெரம்பலூர் : சென்னை இருங்காட்டுக் கோட்டையில் இருந்து கரூர் செட்டிநாடு சிமெண்டு ஃபேக்டரிக்கு பெயிண்ட் வேஸ்டேஜ்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்றிரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. சிமெண்ட் தயாரிக்கும் பணிக்கு இந்த பெயிண்ட் வேஸ்டேஜ்களை ஜிப்சத்துடன் கலந்து சிமெண்டு தயாரிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் (60) என்பவருக்கு சொந்தமான இந்த லாரியை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் முருகவேல்(34) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்து, பெரம்பலூர் நகருக்கான புறவழிச் சாலை வழியாக துறையூர் சாலையை நோக்கி நேற்று (13 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணி அளவில், வடக்கு மாதவி பிரிவுரோடு பகுதியில் சென்ற போது, பெயிண்ட் வேஸ்டேஜ்களை ஏற்றிச் சென்ற லாரி, அதிக வெப்பத்தால் தானே தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனையறிந்த லாரி டிரைவர் முருகவேல் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, கீழேகுதித்து பெரம்பலூர் காவல் துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தார்.
தீ விபத்து பற்றித்தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிமெண்டு ஆலைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்த பெயிண்டு வேஸ்டேஜ்கள் முற்றிலும் எறிவதற்குள், அவற்றை லாரியிலிருந்து கீழே தள்ளி, தீ லாரியில் பரவாமல் தண்ணீரை பாய்ச்சி லாரியை ஓரளவுக்கு பாதுகாப்பாக மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பெரம்பலூர் நகருக்கான புறவழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப் பட்டது.
The post பெரம்பலூர் அருகே அதிகாலை பெயிண்ட் கழிவுகள் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம் appeared first on Dinakaran.
