பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்ததாவது; போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம் – புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்குக் கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஏற்கனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிவிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.

பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும் கைதிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நாங்கள் கைதிகள் போல அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைக்காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சிறைத்துறை மீது எழுந்திருக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.

 

The post பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: