மேட்டுப்பாளையம், ஜூலை 14: அத்திக்கடவு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதில் பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். தொடர்ந்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள முள்ளி வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதிகளில் வன வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா? மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா?என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் கூறுகையில் ‘‘கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் இரண்டு எஸ்ஐக்கள், 12 போலீசார் அடங்கிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள முள்ளி வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பழங்குடியின கிராம மக்களிடம் வனப்பகுதியில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா? நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் அதனை தாங்களாகவே போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்’’ என தெரிவித்தார்.
The post தமிழக – கேரள எல்லை பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல் நடமாட்டம் உள்ளதா? appeared first on Dinakaran.
