பூமிக்கு திரும்ப தயாராகும் டிராகன் விண்கலம் சுபான்சு சுக்லா நாளை மாலை பூமிக்கு திரும்புகிறார்

புதுடெல்லி: சர்வதேச விண்வௌி பயணத்தை முடித்து கொண்டு டிராகன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்ப தயாராகிறது.  அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையமான நாசா விண்வௌி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் ஆக்சியம்-4 விண்வௌி திட்டத்தின் மூலம் மனிதர்களை சர்வதேச விண்வௌி நிலையத்துக்கு அனுப்பி வைக்க நாசா உதவுகிறது. இந்தியாவின் விண்வௌி ஆய்வு மையமான இஸ்ரோவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.

அந்த வகையில் ஆக்சியம்-4 விண்வௌி திட்டத்தில் இந்திய விண்வௌி வீரர் சுபான்சு சுக்லா, நாசாவின் முன்னாள் விண்வௌி வீரர் பெக்கி விட்சன், போலந்து விண்வௌி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரி விண்வௌி வீரர் திபோர் கபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 4 விண்வௌி வீரர்களை சுமந்து கொண்டு டிராகன் விண்கலம் கடந்த ஜூன் 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கென்னடி விண்வௌி தளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் பூமியை சுற்றி வந்து 28 மணி நேர பயணத்துக்கு பிறகு ஜூன் 26ம் தேதி மாலை சர்வதேச விண்வௌி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் 18 நாள் ஆராய்ச்சியை முடித்து கொண்டு 4 விண்வௌி வீரர்களும் பூமிக்கு திரும்ப தயாராகி உள்ளனர்.

அதன்படி, டிராகன் விண்கலம் இன்று மாலை 4.15 மணிக்கு விண்வௌி நிலையத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு, பூமியை நோக்கிய பயணத்தை தொடங்க உள்ளது. 24 மணி நேர பயணத்துக்கு பிறகு நாளை மாலை 3 மணிக்கு வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் தரை இறங்க உள்ளது. விண்வௌி வீரர்களை வரவேற்க நாசாவும், இஸ்ரோவும், மக்களும் மகிழ்ச்சியுடன் காத்து கொண்டுள்ளனர்.

* ‘இந்தியா லட்சியம் நிறைந்ததாக தெரிகிறது’
சுபான்சு சுக்லா கூறுகையில், “இந்தியாவை விண்வௌியிலிருந்து பார்க்கும்போது லட்சியம் நிறைந்ததாக, அச்சமற்றதாக, தன்னம்பிக்கை நிறைந்ததாக தெரிகிறது. இந்த பயணம் எனக்கு ஒரு பெருமை மிக்க பயணம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

The post பூமிக்கு திரும்ப தயாராகும் டிராகன் விண்கலம் சுபான்சு சுக்லா நாளை மாலை பூமிக்கு திரும்புகிறார் appeared first on Dinakaran.

Related Stories: