2026ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கேரளாவில் பாஜ ஆட்சியைப் பிடிக்கும்: அமித்ஷா பேச்சு

திருவனந்தபுரம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் வந்தார். நேற்று காலை அவர் திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ மாநிலக் கமிட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதன்பின் திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற பாஜ வார்டு தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:

பாஜ ஒரு வட மாநில கட்சி என்று காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால் அசாம், திரிபுரா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜ தன்னுடைய வலிமையை நிரூபித்துள்ளது. அடுத்த ஆண்டு கேரளாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் பாஜ செயல்பட்டு வருகிறது. கேரளாவில் பாஜ ஆட்சி அமைக்கும்.

கேரளாவில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜ 21 ஆயிரம் வார்டுகளில் போட்டியிட்டு 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெறும். கேரளாவில் ஆட்சியமைக்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் ரவுடிகளால் கொல்லப்பட்ட பாஜ தொண்டர்களின் கனவாகும். அது நிறைவேறும் காலம் நெருங்கி விட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இருவருமே ஊழல்வாதிகள் தான்.

கூட்டுறவு வங்கிகளிலும், செயற்கை நுண்ணறிவு கேமரா வாங்கியதிலும், கொரோனா காலத்தில் பாதுகாப்பு கவச உடை வாங்கியதிலும் கம்யூனிஸ்ட் அரசு பெரும் ஊழல் செய்துள்ளது. ஆனால் கடந்த 11 வருடங்களில் மோடி அரசு மீது இதுவரை யாராலும் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்

The post 2026ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கேரளாவில் பாஜ ஆட்சியைப் பிடிக்கும்: அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: