கூட்டணி வைத்த உடன் பாஜ ஆளாகவே மாறிய எடப்பாடி பழனிசாமி: மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

கோவை: கோவை மருதமலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: பாஜ – அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, தொடர் குழப்பத்தில் இருக்கிறது. அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறி வருகிறார். ஆனால், எடப்பாடி தனிப்பெரும்பான்மையுடன், தனித்து ஆட்சி அமைப்போம் என கூறி வருகிறார். கூட்டணியில் இருக்கும் குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டியவர் எடப்பாடி பழனிசாமி தான்.

தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் என தெரியவில்லை. இதில், பாஜவுடன் கூட்டணி ஆட்சி என்றால், மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாக இருக்கும். மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜ கூட்டணி ஆட்சி எப்படி கபளிகரம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதேதான் அதிமுக – பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்திலும் நடைபெறும்.

ஆகவே, பாஜவை தமிழகத்தில் கால் ஊன்ற விடக்கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. பாஜவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி பாஜ ஆளாகவே மாறிவிட்டார் என்பது தான் பிரச்னை. இந்து அறநிலையத்துறையை ஒப்படைக்க வேண்டும், சொத்துகளை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரசிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கொள்கையை பாஜ, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழகத்தில் வலியுறுத்தி வருகிறது. இதுவரை பாஜ, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த நிலையில், சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடியும் பாஜ, ஆர்.எஸ்.எஸ் குரலை எதிரொலித்துள்ளார். அதன் விளைவு தான் இந்து அறநிலையத்துறை சார்பாக கல்லூரி கட்ட கூடாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post கூட்டணி வைத்த உடன் பாஜ ஆளாகவே மாறிய எடப்பாடி பழனிசாமி: மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: