உலக பாரம்பரிய சின்னமானது செஞ்சிக்கோட்டை: யுனெஸ்கோ அறிவிப்பு

உலக அளவில் புராதான இடங்களை யுனெஸ்கோ குழு ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் சிற்பங்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலை ரயில், கும்பகோணம் ஐராதீஸ்வரர் கோயில் உள்ளிட்டவற்றை பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

தற்போது சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகள், மராட்டிய மன்னர்களின் ராணுவ கேந்திரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாசார ரீதியிலான உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென யுனெஸ்கோவிற்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்தது. அந்தப் பட்டியலில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையும் இடம் பெற்றுள்ளன.

மராட்டியர்கள் கிபி 1678 முதல் 1697 வரை செஞ்சிக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததால் பிரதான பட்டியலில் இந்த கோட்டையும் இடம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ள யுனெஸ்கோவின் பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் தலைமையிலான தேர்வு குழு பிரதிநிதிகள், அன்றைய தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி செஞ்சிக் கோட்டை மலை உச்சிவரை ஏறி ஆய்வு செய்தனர்.

அப்போது கோட்டையில் உள்ள கல்யாண மஹால், யானை குளம், தர்பார் மண்டபம், நெற்களஞ்சியம், கோட்டை பாலம், மலை மீது உள்ள நெற்களஞ்சியம், பீரங்கிகள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை அவர்கள் பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில் யுனெஸ்கோவின் தேர்வு குழு பிரதிநிதிகள் அளித்த அறிக்கையை ஏற்று மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சிசெய்த 11 கோட்டைகள், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் உலக சுற்றுலா வரிசையிலும் செஞ்சி கோட்டை இடம் பிடித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த உலகப் பாரம்பரிய குழுவின் 47வது அமர்வில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பின்மூலம் உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை செஞ்சிக் கோட்டை பெரிதும் ஈர்த்துள்ளதோடு சுற்றுலா, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் மேலும் வளர்ச்சி காணும் வாய்ப்பு செஞ்சிக்கு ஏற்பட்டுள்ளது.

* பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்று, செஞ்சி பகுதி மக்கள், மஸ்தான் எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள், வணிகர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

* ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை
விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ‘செஞ்சி கோட்டை கி.பி.13ம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சியாளர்கள் பலரால் மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. கடந்த கால வரலாற்றில் தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக, பீஜப்பூர் சுல்தான்களிடம் இருந்து 1677ல் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார், மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி. ஏறக்குறைய 20 ஆண்டுகள் இவர்களது ஆளுகையின்கீழ் இருந்தது செஞ்சிக் கோட்டை.

அந்த நேரத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியினர் தேவனாம்பட்டினத்தில் வணிகம் செய்வதற்கான உரிமை செஞ்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து 1678ல் செஞ்சிக்கு வந்திருந்த ஜெசூட் பாதிரியார் ஆன்ட்ரூ பிரைரா என்பவர், சிவாஜி ஆற்றிய பணிகளை விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

சத்ரபதி சிவாஜியின் இந்த பணிகள் மராட்டிய அரசுக்கு பெரிதும் கைகொடுத்தன. இதன் காரணமாகவே இவர்களிடமிருந்து செஞ்சியைக் கைப்பற்ற மொகலாயர்கள் 7 ஆண்டுகள் முற்றுகையில் ஈடுபட வேண்டியதாக இருந்தது. சிவாஜியின் ஆளுகையின்கீழ் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக செஞ்சிக் கோட்டை மாற்றப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக்கோட்டை இப்போது இடம்பெற்றுள்ளது என்றார்.

The post உலக பாரம்பரிய சின்னமானது செஞ்சிக்கோட்டை: யுனெஸ்கோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: