நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தமிழ்நாட்டில், நியோமேக்ஸ், எல்பின், எம்.ஆர்.டி.டி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும், முதலீட்டிற்கு முதிர்வு காலத்தில் பல மடங்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறியும் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டன.மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துக்கள், பத்திரங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு முதலீட்டு பணம் கிடைக்கவில்லை.

எனவே, பாதிக்கப்பட்ட சிலர், நிதி நிறுவனத்தினரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தாத பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணை ஐகோர்ட் கிளையில் நடந்து வருகிறது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன்முகம்மது ஜின்னா ஆஜராகி, ‘‘நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நிவாரண தொகைகளை திருப்பி வழங்க 10 துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

சொத்துகளை பறிமுதல் செய்வதில் ஏற்படும் தாமதத்தை கண்டறிய தேவையான தகவல்களை உடனுக்குடன் இமெயிலில் பரிமாற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. ரூ.10 கோடி வரையுள்ள மோசடியில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியே சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரம் வழங்கியும், சொத்துக்களை விற்பனை செய்து பணத்தை திரும்ப வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவரின் சொத்துக்களை விற்பனை செய்த பின் 30 நாட்களில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். நிதி நிறுவன மோசடி வழக்கு மற்றும் புகார்களை விரைந்து முடிக்க சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையரை தனி அதிகாரியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்குகளை முடக்க வங்கி அதிகாரிகளுக்கு உடனடியாக இமெயில் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் அரசாணையாக வௌியிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பி.புகழேந்தி, நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கும்விதமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கும், இந்த வழக்கில் அரசுக்கு உறுதுணையாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும், மனுக்களின் மீது விரிவான உத்தரவுகள் பிறப்பிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.

The post நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: