மாடுகளை வைத்து மாநாடு நடத்தும் அரசியல் கட்சி தலைவர்: சீமானை கிண்டலடித்த அண்ணாமலை

சென்னை: சென்னை உத்தண்டியில் அரசியல் பயிலரங்கம் நேற்று நடந்தது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான அண்ணாமலை பேசியதாவது: இன்று வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகி விடுகின்றனர். கையில் மைக் வைத்திருந்தால், வெள்ளை சட்டை போட்டிருந்தால், நான்கு ரீல்ஸ் போட்டால் தலைவன் ஆகி விடுகிறார்கள். பதவி வரலாம், போகலாம்.

எந்த பதவியாக இருந்தாலும் ஒருநாள் இல்லாமல் போவது இயல்பு தான். கட்சி அலுவலகங்களில் நிற்காமல் மக்களை தேடி செல்லுங்கள். தலைவர்கள் அருகில் நிற்க நேரம் செலவிடாதீர்கள். உங்கள் பணி சரியாக இருந்தால் உங்களை தேடி வந்து பார்ப்பார்கள். நாம் சும்மா இருந்தாலும் நமக்கு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக்கொண்டிருக்கிறார் , மாடுகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்கிறார். மரம் ஏறிக் கொண்டிருக்கிறார். அதை சரி, தவறு என்று கூறவில்லை. ஆனால் மக்களை கவர மாற்று வழிகளை கையாளுகின்றனர். யாரையும் காப்பி செய்யாதீர். உங்கள் சுயமான கேரக்டரை இழந்து விடாதீர். உங்களுடைய தனித்தன்மையை விட்டுக் கொடுத்து விடாதீர். உலகம் உங்களுக்காக ஒரு நாள் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

* பத்திரிகையாளர்களை கண்டு ஓட்டம் பிடித்தார்
சென்னை உத்தண்டியில் அரசியல் பயிலரங்கம் நேற்று நடந்தது. இதில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவரை பேட்டி எடுப்பதற்காக பயிலரங்கம் நடைபெற்ற இடத்திற்கு வெளியே பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். அவர்களை கண்டதும் அண்ணாமலை பேட்டி கொடுப்பதை தவிர்த்தார். பத்திரிகையாளர்களை பார்த்து பயந்து அங்கிருந்து தனது கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜ மாநில தலைவராக இருக்கும்போது, விமான நிலையத்துக்கு சென்றால் பேட்டி, விமானத்தில் இருந்து இறங்கினால் பேட்டி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பேட்டி என்று கொடுத்து கொண்டிருந்தார். தலைவர் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார். ஏதாவது சொல்லி அது பெரிய பிரச்னையாகி விடக்கூடாது என்று பேட்டியை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜ சார்பில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளை அவர் புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாடுகளை வைத்து மாநாடு நடத்தும் அரசியல் கட்சி தலைவர்: சீமானை கிண்டலடித்த அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: