ஏர் இந்தியா விமான விபத்து இன்ஜினுக்கு எரிபொருள் செல்லாததே காரணம்: விமானிகளின் உரையாடலை வெளியிட்டு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்கு இன்ஜினுக்கு எரிபொருள் செல்லாததே காரணம் என்றும், இதுதொடர்பாக விமானிகள் இடையே நடந்த உரையாடலையும் வெளியிட்டும் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் (ஏஐ 171) கடந்த மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போது, வெறும் 30 விநாடிகளில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரு பயணியை தவிர 241 பேரும் பலியாகினர்.

மேலும், விமானம் மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்ததில் அங்கிருந்த மாணவர்கள் உட்பட 19 பேரும் பலியாகினர். இந்தியாவின் மிக பயங்கர விமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி), இங்கிலாந்தின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை ஏஏஐபி நேற்று வெளியிட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானம் பிற்பகல் 1.38 மணிக்கு புறப்பட்டதும் 180 நாட்ஸ் என்ற வான் வேகத்தை எட்டி உள்ளது. விமானத்தை துணை விமானி இயக்கி உள்ளார். கேப்டன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். விமானம் புறப்பட்ட உடனேயே 2 இன்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோக கட்டுப்பாட்டு சுவிட்ச், கட்-ஆப் நிலைக்கு சென்றன. இது எப்படி நடந்தது அல்லது யார் அதைச் செய்தார்கள் என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த 2 சுவிட்களும் இன்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்ச்கள்.

இதில் ரன் மற்றும் கட்-அப் என்ற 2 நிலைகள் இருக்கும். விமானம் அதன் நிறுத்த இடத்தை அடையும் போதும் அல்லது விமானம் நடுவானில் தீப்பிடித்து அசம்பாவிதம் ஏற்படும் சமயத்திலும் இன்ஜின் இயக்கத்தை நிறுத்த இந்த சுவிட்ச், கட்-ஆப் நிலைக்கு மாற்றப்படும். மற்றபடி விமானம் இயங்கிக் கொண்டிருக்கும் போது ரன் நிலையிலேயே இருக்கும். இந்த 2 சுவிட்ச்கள், விமானம் புறப்பட்ட உடனேயே ஒரு நொடி இடைவெளியில் அடுத்தடுத்து கட்-ஆப் நிலைக்கு சென்றுள்ளன.

இந்த தகவல்கள் காக்பிட்டில் விமானிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் தெரியவந்துள்ளது. காக்பிட் குரல் பதிவில் ஒரு விமானி, ‘ஏன் கட் ஆப் செய்தீர்கள்?’ என கேட்கிறார். அதற்கு மற்றொரு விமானி ‘நான் எதுவும் செய்யவில்லை’ என பதிலளிக்கிறார். அந்த குழப்பமான சூழலை தொடர்ந்து, விமானத்தை பறக்க வைக்க விமானிகள் உடனடியாக செயல்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகம் நின்றதால், இரண்டு இன்ஜின்களுக்கும் மேலே எழும்புவதற்கான ஆற்றல் கிடைக்கவில்லை.

எனவே, விமானம் தரையிலிருந்து பறந்த உடனேயே அவசரகால மின்சார சக்தியை வழங்க பயன்படுத்தப்படும் ரேப் ஏர் டர்பைன் கருவியை விமானிகள் இயக்கினர். இது சிசிடிவி வீடியோ காட்சியிலும் பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து விமானிகள் 10 விநாடிகள் கழித்து, இரு சுவிட்ச்களையும் கட்-ஆப் நிலையில் இருந்து ரன் நிலைக்கு மாற்றி உள்ளனர். இதன் மூலம் முதல் இன்ஜின் செயல்படத் தொடங்கினாலும், 2வது இன்ஜின் செயல்பாட்டிற்கு திரும்பவில்லை.

இதன் காரணமாக, விமானி ‘மே டே, மே டே’ என்கிற அபாய நிலைக்கான எச்சரிக்கை வார்த்தையை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்பட்ட 30வது நொடியில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தின் உடைந்த பாகங்கள் 1000 மீட்டர் சுற்றளவில் சிதறிக் கிடந்தன.

இது விபத்தின் பாதிப்பை காட்டுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் இரு இன்ஜின்களின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் இன்ஜினில் உள்ள எரிபொருள் சோதிக்கப்பட்டது. மேலும் விமானம் விபத்துக்குள்ளான பிறகு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் இரண்டும் ரன் நிலையில் இருந்துள்ளதாக 15 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் போயிங் நிறுவனம் மீதோ அல்லது இன்ஜின் தயாரிப்பு நிறுவமான ஜிஇ இன்ஜின் மீதோ நடவடிக்கை எடுக்க எந்த பரிந்துரையும் விடுக்கப்படவில்லை. ஏஏஐபியின் முதல்கட்ட அறிக்கையால் இந்த விபத்து மனித தவறால் நடந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பதில் மேலும் குழப்பங்கள் அதிகரித்துள்ளது.

* விமானிகளுடன் சேர்ந்து ஆய்வு
ஏர் இந்தியா நிறுவனம் விடுத்த அறிக்கையில், ‘‘விமான விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப அறிக்கை எங்களுக்கு ஆரம்பகட்ட புரிதலை தருகிறது. இது இறுதியானது அல்ல. ஆனாலும் காரணங்களை அடையாளம் காண்பதிலும், இதுபோன்ற துயரம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் முக்கியமான படியாகும். இந்த அறிக்கை குறித்து விரைவில் விமானிகளுடன் கலந்துரையாடி மதிப்பாய்வு செய்யப்படும்’’ என கூறி உள்ளது.

* நியாயமான விசாரணை தேவை
இந்திய விமான விமானிகள் சங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘விமானிகள்தான் குற்றவாளிகள் என்பதாக ஊகித்து விசாரணை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே செல்வதாக உள்ளது. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்த முக்கியமான விசாரணைக்கு தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் நியாயமாக, உண்மையின் அடிப்படையில் நடைபெற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

* அனுபவமிக்க விமானிகள்
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வால் (56) 30 ஆண்டுகள் அனுபவமிக்கவர். இவர் 15,638 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார். போயிங் 787 ரக விமானத்தை மட்டுமே 8,596 மணி நேரம் இயக்கி உள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் பயிற்றுநருமாக பணியாற்றி உள்ளார். இவருடன் இருந்த துணை விமானி கிளைவ் குந்தர் (32) 3,403 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவசாலி.

* எரிபொருள் சுவிட்ச்களை எப்படி மாற்ற முடியும்?
எரிபொருள் கட்டுப்படுத்துவதற்கான சுவிட்ச்கள் இன்ஜினை இயக்கவும் நிறுத்தவும் உதவுகின்றன. இவற்றை தெரியாமலேயோ அல்லது ஏதேச்சையாகவோ மாற்ற முடியாது என்கின்றனர் நிபுணர்கள். மூத்த விமானி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த 2 சுவிட்ச்களும் பிராக்கெட்ஸ் மூலம் லாக் செய்யப்பட்டிருக்கும். விமானிகள் தெரியாமல் அவற்றை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுவிட்ச்சின் நிலையை மாற்றுவதற்கு முன்பாக முதலில் அதனை இழுத்து லாக்கை விடுவிக்க வேண்டும்.

அதன்பிறகு தான் அதை ரன் நிலைக்கோ அல்லது கட் ஆப் நிலைக்கோ மாற்ற முடியும். ஏதேச்சையாக சுவிட்ச்சின் நிலையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. விமானம் பறக்கும் சமயத்தில் எந்த விமானியும் இந்த சுவிட்ச்சை பிடித்து இழுத்து அதன் நிலையை மாற்ற மாட்டார்கள். அதற்கு சாத்தியம் குறைவு’’ என்றார். அப்படியெனில் இது தொழில்நுட்ப கோளாறால் இந்த சுவிட்ச்களின் நிலை மாறியதா என்பது தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.

* லேண்டிங் கியர் கீழ் நோக்கி இருந்தது ஏன்?
விமானத்தின் எரிந்து போன மீட்கப்பட்ட பாகங்களை பார்க்கையில், அதில் லேண்டிங் கியர் கீழ் நோக்கி இருப்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, விமானம் தரையில் ஓடும் போது இந்த லேண்டிங் கியர் ‘டவுண்’ எனப்படும் கீழ் நோக்கிய நிலையில் இருக்கும். அதன் பிறகு விமானம் மேலே எழும்பி பறக்கத் தொடங்கியதும், ‘அப்’ நிலைக்கு உயர்த்த விமானி அறிவுறுத்துவார்.

ஆனால் அது போன்ற எந்த உரையாடலும் காக்பிட்டில் பதிவாகவில்லை. மேலும், லேண்டிங் கியரும் கீழ் நோக்கிய நிலையிலேயே உள்ளது. ஒருவேளை இந்த கியரை மாற்றவில்லை என்றால் விமானத்தில் தொழில்நுட்ப குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. லேண்டிங் கியரை மாற்றாததால் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் தாமாக கட்-ஆப் நிலைக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது என சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

The post ஏர் இந்தியா விமான விபத்து இன்ஜினுக்கு எரிபொருள் செல்லாததே காரணம்: விமானிகளின் உரையாடலை வெளியிட்டு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: