கோவை மாவட்டத்தில் 24 மணி நேர ரோந்து பணிக்கு “ஸ்மார்ட் காக்கி” திட்டம்

*எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

கோவை : கோவை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று கோவை மாவட்ட போலீசார் சார்பில் “ஸ்மார்ட் காக்கி” என்ற புதிய திட்டத்தை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் காக்கி திட்டத்தில் கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் ஸ்டேசன்களுக்கும் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்கும் வகையில் நவீன கருவிகளுடன் கூடிய பைக்குகள் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 35 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 70 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் கோவை புறநகர் பகுதிகளில் ரோந்து சுற்றி வருவார்கள்.அதேபோல ஸ்மார்ட் காக்கி திட்டத்தின் கீழ் உள்ள போலீசாருக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீலம், வெள்ளை நிறத்தில் கோர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் பயன்படுத்தும் நவீன வசதியுடைய பைக்குகளில் வயர்லெஸ் கருவி, கேமிரா, மைக், போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்க தேவையான கருவி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பயன்படுத்தும் லத்தி வைப்பதற்கு தனியாக பைக்கில் இடம் அமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் சைரன் ஒலி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் கூறும்போது, கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் ஸ்டேசன்களுக்கும் தலா 1 மோட்டார் சைக்கிள் “ஸ்மார்ட் காக்கி” திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதிக பரப்பளவு கொண்ட போலீஸ் ஸ்டேசன்களுக்கு கூடுதல் பைக் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 70 ஸ்மார்ட் காக்கி போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள், சட்ட விரோத செயல்கள் குறித்து புகார்கள் போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவித்தால் உடனடியாக “ஸ்மார்ட் காக்கி” போலீசாருக்கு மைக் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

இதற்காக ஸ்மார்ட் காக்கி போலீசார் எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்ற “லொகேஷன்” கண்டறியும் வசதியும் உள்ளது. புகார் வரும் இடத்திற்கு அருகில் யார் உள்ளார்களோ அங்கு “ஸ்மார்ட் காக்கி” போலீஸ்காரர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதன் மூலம் உடனடியாக சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்று நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் வசதியாக இருக்கும். சூலூரில் போலீஸ்காரரை தாக்கிய நபர்களை நெருங்கிவிட்டோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவை மாவட்டத்தில் 24 மணி நேர ரோந்து பணிக்கு “ஸ்மார்ட் காக்கி” திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: