திருப்பூர் : வருகிற 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள நிலையில் முகாமில் பயன்படுத்துவதற்கு தேவையான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று வந்தது. இதனை பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ என்ற திட்டம் வருகிற 15ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 20 முகாம்களும், நகராட்சி பகுதியில் 56 முகாம்களும், பேரூராட்சி பகுதியில் 28 மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் 221 என மொத்தம் 325 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேற்படி முகாம்களில் நகரப்பகுதிக்கு 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராம பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படும் அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை அவர்களின் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் பொதுமக்களின் வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகள் குறித்தும், அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், தகவல் கையேடுகள், விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’’ பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் முகாம் நடைபெறும் நாள் அன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை வழங்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த முகாமில் பயன்படுத்தப்பட உள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் தாலுகா வாரியாக பிரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
The post 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருப்பூர் மாவட்டத்திற்கு விண்ணப்பங்கள் வருகை appeared first on Dinakaran.
