நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மற்றும் தாட்கோ ஆகியவை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மாவட்ட தாட்கோ மேலாளர் சக்திவேல்கலியபெருமாள் வரவேற்றார். கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார்.
கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, டிஆர்ஓ பவணந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ சார்பில் தூய்மை பணிபுரிவோர் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 500 மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலை, 100 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் சங்க சொசைட்டி மூலம் தூய்மை பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் 19 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கடன் உதவித்தொகைக்கான காசோலை ஆகியவற்றை தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி வழங்கினார்.
இதை தொடர்ந்து அவர் பேசியதாவது: தூய்மை பணியாளர்கள் பணி நேரத்தில் கையுறை, காலுறை, முக கவசம் ஆகியவற்றை அணிய வேண்டும். தங்களது பாதுகாப்பை முதலில் உறுதி செய்து பணியில் ஈடுபட வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்ள ஒப்பந்த தொழிலாளர்கள் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மாதம் ஒரு முறை கட்டாயம் மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தூய்மை பணியாளர் நல வாரியத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த தொகை போதுமானது இல்லை என கூறியதால் கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது ரு.15 கோடி நலவாரியத்தில் உள்ளது. மற்ற நலவாரியம் போல் இல்லாமல் து£ய்மை பணியாளர் நல வாரிய தொகையை தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தூய்மைப் பணியாளர் நலவாரிய தொகை முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு மட்மே பயன்படும்.
விழாவில் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி, கீழ்வேளுர், திட்டச்சேரி, தலைஞாயிறு ஆகிய பேரூராட்சிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய துணை தலைவர் கனிமொழிபத்மநாபன், மாநில நல வாரிய உறுப்பினர் அரிஷ்குமார், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனா சைமன், வேதாரண்யம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.
