ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயம்

*40 தையல் போட்டு சிகிச்சை

தொடரும் தொல்லையால் பீதி

ஓசூர் : ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட தொழிலாளியான இவரது மனைவி மம்தா. இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இதில், 2வது மகன் ராம்சரண்(8), அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய ராம்சரண், பக்கத்து வீட்டு சிறுவனோடு சேர்ந்து அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். அப்போது, அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து வெளியே வந்த நாய் ஒன்று சிறுவர்கள் இருவரையும் துரத்தி உள்ளது.

இதில், ராம்சரண் சிக்கிக் கொண்டான். அந்த நாய் சிறுவனின் தலை, முதுகு, காது, மூக்கு, கன்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதில், சிறுவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிகமாக ரத்தமும் வெளி யேறியது.

அலறல் சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டனர். தொடர்ந்து கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு 40 இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் முத்துலட்சுமி (25) என்பவர், ஓசூர் தேர்பேட்டை பகுதியில் டூவீலரில் சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அவரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில், அவருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓசூர் அருகே தின்னூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் எட்வின் பிரியன் என்பவரை நாய் கடித்ததில் உரிய சிகிச்சை பெறாததால் 2 மாதம் காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: