பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை 23 நிமிடங்களில் அழித்தோம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெருமிதம்

சென்னை: சென்னை ஐஐடியின் 62வது பட்டமளிப்பு விழா கிண்டி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிறப்பு விருந்தினராக பரதநாட்டிய கலைஞர் பத்மவிபூஷன் பத்மா சுப்பிரமணியம் கலந்து கொண்டனர். விழாவில் 529 பிஎச்டி உள்பட மொத்தம் 3,227 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக இந்திய குடியரசு தலைவர் விருது மற்றும் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா நினைவு விருது மாணவன் பி.எஸ்.அனிருத்துக்கும், டாக்டர் சங்கர் தயாள் சர்மா விருது மாணவன் ஆர்.அபினவுக்கும், ஆளுநர் விருது ராஜகோபால் சுப்ரமணியத்துக்கும் வழங்கப்பட்டன. சிறப்பு விருதுகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கினார்.

விழாவில் அஜித் தோவல் பேசியதாவது: சென்னை ஐஐடியில் படித்த உங்களை போன்ற 48 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நாட்டுக்காக சேவையாற்றி வருகின்றனர். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை மட்டுமே இலக்காக கொண்டு நாம் தாக்குதல் நடத்தினோம். அந்த 9 இடங்களும் எல்லைப் பகுதியில் கிடையாது. சரியாக கணித்து துல்லியமாக தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை 23 நிமிடங்களில் முடித்துவிட்டோம். பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா மீது பாகிஸ்தான் பாதிப்புகள் ஏற்படுத்தியதாக தவறாக செய்திகள் வெளியிட்டன.

இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது போன்ற ஒரு படத்தை அவர்களால் ஆதரவாக வெளியிட முடியுமா? ஒரு கண்ணாடி உடைந்ததற்கான ஆதாரங்களை காண்பிக்க முடியுமா? நாம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்களை, தாக்குதலுக்கு முன் மற்றும் பின் என சேகரித்துள்ளோம். அதுவே சான்று. மாணவர்கள் நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும். பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பத்தில் நாட்டை மேம்படுத்த மாணவர்களின் பங்களிப்பு முக்கியம். அடுத்த ஆண்டு உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரமிக்க நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை 23 நிமிடங்களில் அழித்தோம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: