×

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது: சன்ரைசர்ஸ் புகாரை அடுத்து நடவடிக்கை

ஐதராபாத்: ஐபிஎல் இலவச டிக்கெட்டுகள் கேட்டு பிளாக்மெயில் செய்ததாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் 4 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் அணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் நிர்வாக கவுன்சில் ஆகியவற்றுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜகன் மோகன் ராவ் மற்றும் நிர்வாகிகள், இலவச டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டுவதாகவும், பிளாக்மெயில் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

மேலும், ஒப்பந்தப்படி ஒவ்வொரு போட்டிக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட 3,900 இலவச டிக்கெட்டுகளை விட கூடுதலாக, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் கேட்டதாகவும், இல்லாவிடில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஒரு போட்டியை நடக்க விடாமல் தடுத்துவிடுவோம் என மிரட்டியதாகவும், கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த பிரச்னையால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதும் போட்டியை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என சன்ரைசர்ஸ் நிர்வாகம் எச்சரித்து இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தெலுங்கானா கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் தரம் குரவ ரெட்டி, தெலுங்கானா சிஐடி போலீஸ் அலுவகத்தில் புகார் அளித்தார். ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜகன் மோகன் ராவ், போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை பயன்படுத்தி ஐதராபாத் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட்டதாகவும், சங்க குழு நிர்வாகிகளின் துணையுடன் ரூ.2.3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில், ஏமாற்றும் நோக்கில் மோசடி, திருத்தப்பட்ட ஆவணத்தை உண்மையானது எனக் கூறி ஏமாற்றுதல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜகன் மோகன் ராவ், காச்சிபோலியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டார். மேலும், சங்க பொருளாளர் சீனிவாச ராவ், தலைமை நிர்வாக அதிகாரி சுனில் காண்டே, பொதுச் செயலாளர் ராஜேந்தர் யாதவ், அவரது மனைவி கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தை கலைக்கணும்: அசாருதீன் வலியுறுத்தல்
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்து வரும் முறைகேடுகள் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் முகம்மது அசாருதீன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஐபிஎல் டிக்கெட் தொடர்பாக நடந்து வரும் ஊழல் விவகாரம் பற்றிய செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் அதிகளவில் ஊழல் நடந்து வருகிறது. தனது கடமையில் இருந்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தவறி விட்டது. நடந்துள்ள ஊழல்களுக்கு அந்த சங்கமே பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போதைய ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை கலைக்க வேண்டும். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து, அதன் கண்ணியத்தை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது: சன்ரைசர்ஸ் புகாரை அடுத்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Hyderabad Cricket Association ,IPL ,Sunrisers ,Hyderabad ,Sunrisers Hyderabad ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...