இந்நிலையில், நேற்று விருத்தாசலத்தில் பொதுக்குழுவை முடித்துவிட்டு வெளியே வந்த ராமதாசிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அப்போது, ராமதாஸ் கூறுகையில், ‘ஒட்டுக் கேட்கும் கருவி. என் வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்திலேயே என் பக்கத்திலே வச்சு இருக்காங்க… யார் வச்சாங்க, எதற்காக வெச்சாங்க என்பதை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். அந்த ஒட்டு கேட்கும் கருவி வெளிநாட்டு கருவி. அதை கண்டுபிடித்து எடுத்து பார்த்தால் லண்டனில் இருந்து வந்தது. அதிகமான விலையுள்ள ஒரு கருவி’ என்றார். தொடர்ந்து, எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. இனிஷியல் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்று கூறினீர்களே யாருக்காக என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு கோபமாக நிருபர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராமதாஸ் சென்றுவிட்டார்.
முன்னதாக தைலாபுரத்தில் உள்ள வீட்டில் ரகசியமாக பேசும் பேச்சுக்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி வெளியே செல்கிறது என்று சந்தேகமடைந்து ராமதாஸ் விசாரித்து உள்ளார். அப்போது, அவர் அமரும் நாற்காலி அருகில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அவர் கும்பகோணம் புறப்படுவதற்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் தனியார் ஏஜென்சியை வரவழைத்து ஆய்வு ராமதாஸ் ஆய்வு செய்து உள்ளார். அப்போது, தான் அமரும் இருக்கையின் அருகிலேயே அதிநவீன ஒட்டு கேட்கும் இயந்திரம் வைத்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதால் ராமதாஸ் அதிர்ச்சி அடைந்தார். அந்த கருவியை ஆய்வு செய்தபோது லண்டனில் தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த அதிநவீன கருவி என தெரிந்தது. இதன்பின் ராமதாஸ் கும்பகோணம் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அறிந்துதான் நேற்று முன்தினம் திடீரென அன்புமணி தைலாபுரம் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தாயார் சரஸ்வதியிடம் சுமார் 45 நிமிடம் சந்தித்து பேசிவிட்டு சென்றார். தைலாபுரம் தோட்டத்துக்கு அவ்வளவு எளிதில் புதிய நபர்கள் உள்ளே செல்ல முடியாது. ராமதாசை எளிதில் நெருங்க கூடிய நபரால்தான் இந்த ஒட்டு கேட்கும் கருவியை வைத்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டு கேட்கும் கருவியை வாங்கி வந்தவர்கள் யார்? எப்படி தைலாபுரம் தோட்டம் வந்தது, தனது இருக்கையின் அருகில் வைத்த கறுப்பு ஆடு யார்? என்பதை கண்டறிய சைபர் கிரைம் குற்றப்பிரிவை அணுக ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
The post லண்டனில் இருந்து வாங்கிட்டு வந்து வச்சிருக்காங்க நான் உட்காரும் நாற்காலி அருகில் ஒட்டு கேட்கும் கருவி: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு; தனியார் ஏஜென்சி மூலம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
