யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை: ஆய்வில் தகவல்

சென்னை: டைப் – 2 சர்க்கரை நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் நறுமண எண்ணெய் மூலம் வயிற்றில் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தால் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர்கள் மணவாளன், தீபா, கீர்த்தி, மூவேந்தன், நிவேதிதா ஆகியோர் முன்னெடுத்தனர். அதன் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 11.4 சதவீதம் பேருக்கு டைப் – 2 சர்க்கரை நோயும், 15.3 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது. அதிலும் 16.4 சதவீத பாதிப்பு நகர்ப்புற பகுதிகளில் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் (ஹைப்போகிளைசிமிக்) மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதனை தொடர்ந்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிப்பு, கை, கால்களில் வீக்கம், ஜீரண மண்டலம், இதயம், கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு வயிற்றில் மசாஜ் சிகிச்சை அளிக்கும் ஆய்வை முன்னெடுத்தோம். இதற்கு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த 30 வயது முதல் 70 வயதிலான சர்க்கரை நோயாளிகள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பூக்கள், தாவரங்கள், மூலிகைகள், வேர்கள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி தயாரிக்கப்பட்ட யூகலிப்டஸ் எண்ணெய் தலா 4 மி.லி.யுடன், நல்லெண்ணெய் 50 மி.லி.யுடன் சேர்த்து சர்க்கரை நோயாளிகளின் வயிற்றில் 20 நிமிஷம் மசாஜ் செய்யப்பட்டது. முன்னதாக அவர்களது ரத்த சர்க்கரை அளவு (ரேண்டம்), இதய துடிப்பு, நுரையீரல் செயல்திறன், மன நலன் சார்ந்த நரம்பியல் செயல்பாடுகள் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் பதிவு செய்யப்பட்டன.

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அதே பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் ரத்த சர்க்கரை அளவு சராசரியாக 4.785 சதவீதம் குறைந்திருந்தது தெரியவந்தது. அதேபோன்று இதய துடிப்பும் சீராக இருப்பதற்கு அந்த சிகிச்சை உதவுவது கண்டறியப்பட்டது. இதை தவிர ஆரோக்கியமான மன நிலை மற்றும் சிந்தனை ஆற்றல் மேம்பாட்டுக்கு யூகலிப்டஸ் நறுமண சிகிச்சை உறுதுணையாக இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்தன. இந்த வகை ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது அவசியம். எனவே, இதனை மேலும் விரிவாகவும், நுட்பமாகவும் மேற்கொள்ள நீடித்த ஆய்வு தேவைப்படும்.அவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: