உபா சட்டத்தை காட்டிலும் வலிமையான சட்டம்; நக்சல் ஆதரவு சித்தாந்தத்தை பரப்ப தடை: மகாராஷ்டிராவில் புதிய மசோதா நிறைவேற்றம்

மும்பை: நக்சல் ஆதரவு சித்தாந்த பரவலுக்குத் தடை விதிக்கும் வகையில் உபா சட்டத்தை காட்டிலும் வலிமையான சட்ட மசோதா, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மற்றும் கொங்கன் உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட நக்சல் ஆதரவாளர்களின் சித்தாந்தம் அதிகரித்து வருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. வன்முறையையும், கொரில்லா போர் முறையையும் தூண்டும் இதுபோன்ற சித்தாந்தங்களை எதிர்கொள்ள, தற்போதுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் போதுமானதாக இல்லை என்று மாநில அரசு கருதியது. ஏனெனில், உபா சட்டம் நேரடி தீவிரவாதச் செயல்களை மட்டுமே கையாள்வதாகவும், அதன் பின்னணியில் உள்ள சித்தாந்த பரவலைத் தடுப்பதில் முழுமையாகப் பயனளிக்கவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவையில் ‘மகாராஷ்டிர பொதுப் பாதுகாப்பு மசோதா 2024’-ஐ அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா, வன்முறையைத் தூண்டும், அரசைச் சீர்குலைக்க முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, வழக்கு தொடர்வதற்கு முன்பு, உயர் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு வழக்கறிஞர் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆணையம் வழக்கை ஆய்வு செய்யும் என்ற முக்கிய அம்சம் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ வினோத் நிகோலே எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த மசோதா பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எனவே மேற்கண்ட புதிய சட்டத்தின்படி நக்சல் ஆதரவு சித்தாந்தங்களை பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உபா சட்டத்தை காட்டிலும் கடுமையான விதிகள் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த சட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

The post உபா சட்டத்தை காட்டிலும் வலிமையான சட்டம்; நக்சல் ஆதரவு சித்தாந்தத்தை பரப்ப தடை: மகாராஷ்டிராவில் புதிய மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: