பல்கலை. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதியின் காரை மறிக்க முயற்சி: டெல்லி ஜே.என்.யூ-வில் பதற்றம்

புதுடெல்லி: பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதியின் காரை மாணவர்கள் மறிக்க முயற்சித்ததால் டெல்லி ஜே.என்.யூ-வில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ), மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக மாணவர் பேரவையினர் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கைகள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உரிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டி வந்த மாணவர்கள், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தகுந்த தருணத்திற்காகக் காத்திருந்தனர். இந்தக் தொடர் போராட்டங்களால் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்கனவே ஒருவித பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்தச் சூழலில், ‘இந்திய அறிவு மரபு’ குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று ஜே.என்.யூ-விற்கு வருகை தந்தார்.

 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில், சில மாணவர்கள் வளாகத்திற்குள் துணை ஜனாதிபதியின் வாகனத்தை மறிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் துணை ஜாதிபதியின் காரை மறிக்க முயன்ற மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இந்தச் சம்பவத்திற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமாகவும், பல்கலைக்கழகத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்துகொண்ட மாணவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறிய பல்கலைக்கழக நிர்வாகம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

The post பல்கலை. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதியின் காரை மறிக்க முயற்சி: டெல்லி ஜே.என்.யூ-வில் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: