மாவட்டத்தில் முதல் முறையாக பசுமை பள்ளி திட்டம் துவக்கம்

*முதற்கட்டமாக 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 50 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்ட தொடங்கப்படுவதை தொடர்ந்து ஆசிரியர்கள் 50 பேருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சி முகாமை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, தொடங்கிவைத்து பேசும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் முறையாக பசுமை பள்ளி என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இதன் முன்னோட்டமாக இன்றைய தினம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளில் 50 பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கீஸ்டோன் தொண்டு நிறுவனத்தின் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் நமது மாவட்டத்தில் மண்சரிவு தடுக்கும் முறை, மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் கருத்தாளர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தாங்கள் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் எடுத்துக்கூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவித்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில் வரும் தலைமுறையினரும் அதனை பின்பற்றுவதோடு சுற்றுச்சூழல் பாதுகாக்க ஏதுவாக அமையும்.

இந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த பசுமைப்பள்ளி திட்டமாகும். இதன் மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் கல்வி அறிவை வளர்ப்பதுடன், பாரம்பரிய மரபுகள் மற்றும் நவீன சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், இத்திட்டம் தொடர்ந்து பள்ளிகளில் செயல்படுத்தி வரும் பட்சத்தில், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயல்பாட்டாளர்களாக மாணவர்கள் திகழ்வார்கள்.

மேலும், மாணவர்களை ஊக்கப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாதம் ஒருமுறை திடக்கழிவு மேலாண்மை, தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு களப்பயணமாக மாணவர்களை அழைத்து செல்ல ஏற்பாடுகளும் செய்யப்படும்.

எனவே, இந்த பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்த பயிற்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்பட்ட பல்வேறு கருத்துக்களை மாணவர்களிடையே தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முதல் முறையாக நமது மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார். இப்பயிற்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நந்தகுமார், உதவித்திட்ட அலுவலர் அர்ஜூனன், பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்குமார், கீஸ்டோன் தொண்டு நிறுவன நிர்வாகி பவ்யா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் முதல் முறையாக பசுமை பள்ளி திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: