ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களுக்கு 90 நாட்களுக்குள் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்

*ரூ.605 கோடி மதிப்பிலான பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

ராதாபுரம் : ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களில் ஊரக குடியிருப்புகளுக்கு 90 நாட்களுக்குள் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கப்படும் என திட்டப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.நெல்லை மாவட்டத்தில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இதில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார் தலைமையில் மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் முன்னிலையில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சிகளுக்கும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளுக்கும் வழங்கப்படவுள்ள குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை ஒன்றியம், மேலமுன்னீர்பள்ளம் அருகில் தாமிரபரணி ஆற்றில் ஒரு நீர்சேகரிப்பு கிணறு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.. அந்த கிணற்றிற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் மின்சாரத்துறையின் மூலம் நடந்து வருவதை விரைந்து முடிக்க வேண்டும்.

நீர்சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக சிங்கிகுளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் 22.79 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கிகுளத்தில் நடந்து வரும் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 5 சதவீத பணிகளும் முடிந்து அடுத்தமாதம் இறுதிக்குள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

தொடர்ந்து, சிங்கிகுளம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பிரண்டை மலையிலுள்ள 9.50 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள முதலாவது தலைமை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படும். பின்னர் அங்கிருந்து 6.50 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தெற்குவள்ளியூர் தலைமை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், ராதாபுரம் தலைமை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் 303.88 கி.மீ. நீளமுள்ள குழாய்கள் வழியாக நீரேற்றம் செய்யப்படவுள்ளது.

இன்னும் 60 முதல் 90 நாட்களுக்குக்குள் இப்பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் கிடைக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, பணியாளர்களும் முழுவீச்சில் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை நான் பாராட்டுகிறேன். தங்கள் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்களும் முழு ஒத்துழைப்புடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆய்வின் போது, மேற்பார்வை பொறியாளர் வெங்கடேஷ், நிர்வாக பொறியாளர்கள் ராமலெட்சுமி, கனகராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முகமது ஷபி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகர், முருகன் (வள்ளியூர்), அலெக்ஸ், சாமுவேல் (ராதாபுரம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களுக்கு 90 நாட்களுக்குள் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: