நாகர்கோவில் : குளங்களை தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதை நீடிக்க செய்ய வேண்டும் என்று கோதையாறு பாசன திட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக குழுவினர் குமரி மாவட்ட கலெக்டர், கோதையாறு பாசன திட்ட செயற்பொறியாளர், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் குளங்கள் தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது மிக சிறப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கடும் முயற்சி மற்றும் ஒத்துழைப்போடும் மாவட்ட அமைச்சரின் வழிகாட்டுதலுடனும் வண்டல் மண் எடுப்பது கடந்த சில மாதங்களாக முழு வேகத்தில் நடைபெற்றது.
குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் கொள்ளளவு அதிகரித்ததுடன் விவசாயிகள், பொதுமக்கள், செங்கல் தயாரிப்போர் வாகனங்கள் வைத்திருப்போர் என அனைத்து தரப்பினரும் தொழில் சிறந்து பயன்பெற்றனர்.
இந்தநிலையில் இந்த மாதம் தூர்வாரும் பணியை நிறுத்தலாம் என அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். தண்ணீர் நிரம்பியுள்ள குளங்களில் தூர்வார முடியாது என்பதால் அந்த குளங்களில் நிறுத்தலாம். ஆனால் இப்போதும் மாவட்டம் முழுவதும் ஏராளமான குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.
மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பட்டணங்காலில் பள்ளியாடி பகுதியில் துண்டித்து சாலை வேலை நடைபெறுவதால் பட்டணங்காலில் தண்ணீர் வராமல் குளங்கள் வறண்டு காணப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பட்டணங்கால் உட்பட மாவட்டம் முழுவதும் வறண்டு காணப்படும் குளங்களில் மட்டும் தொடர்ந்து தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post குளங்களை தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதை நீட்டிக்க செய்ய வேண்டும் appeared first on Dinakaran.
