செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறுவது வெளிப்படையான ஹிந்தித் திணிப்பு முயற்சி: கி.வீரமணி கண்டனம்

சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறுவது வெளிப்படையான ஹிந்தித் திணிப்பு முயற்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரிய முயற்சியால் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதுடன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சென்னையில் அமைக்கப்பெற்றது.

இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் இருந்தாலும், இந்நிறுவனம் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் காரணத்தால் முழுமையாக அதன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கைகளை முன்னெடுக்கும் செயல்பாடுகளும் வரலாற்றுச் சம்பந்தமில்லாத அகத்தியரைத் தூக்கிப் பிடிக்கும் முயற்சிகளும் இந்த நிறுவனத்தின் வாயிலாக இதற்குமுன் நடைபெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய செயல்பாடுகளுக்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்நிலையில் “இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்” என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கத்தினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. அதன் அழைப்பிதழில் தமிழும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருப்பது தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிக் கொள்கை. ஒன்றிய அரசே ஆயினும் அதன் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எனும் மூன்று மொழிகளில் இடம் பெறுவதுதான் நடைமுறை.

ஆனால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பயிலரங்கு அழைப்பிதழில் ஆங்கிலத்தைத் தவிர்த்து ஹிந்தியை மட்டும் பயன்படுத்துவது ஹிந்தித் திணிப்பின் அப்பட்டமான போக்கே ஆகும். தமிழ் இடம்பெற்று விட்டது என்று நாம் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. உலகத் திறப்பாக நமக்கு கிடைத்திருக்கும் ஆங்கிலமே நமது தொடர்பு மொழி. ஒன்றிய அரசுக்கும் நமக்குமான தொடர்பு மொழியும் அதுவே! இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியே ஆங்கிலம், இந்தி இரண்டுமே ஒன்றிய அரசின் அலுவல்மொழிகள்.

அதில் ஆங்கிலத்தை திட்டமிட்டுப் புறக்கணித்திருப்பது சட்ட விரோதமே ஆகும். ஆங்கிலத்தைத் தவிர்ப்பது என்பது ஹிந்தியை மட்டுமே பொதுத் தொடர்பு மொழி ஆக்கும் சதிச் செயலே ஆகும். ஆங்கிலத்தை ஒழித்து விட்டால் அதனைத் தொடர்ந்து ஹிந்தியை மட்டுமே தொடர்பு மொழியாக்கி ஹிந்தியைக் கட்டாயம் ஆக்கும் இந்தச் சதியை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது. தமிழ்நாடு முதலமைச்சர் , இதில் உரிய கவனம் செலுத்தி, ஒன்றிய அரசின் நிறுவனத்தை உடனடியாக வழிக்குக் கொண்டு வருவது அவசியமாகும்.

குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குரங்கின் கதையாக, ஹிந்தி சமஸ்கிருதத்தைத் திணிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை அவ்வப்போது எடுத்துக் கொண்டிருக்கிறது.அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளிப்படுத்திய ஆங்கில வெறுப்பின் எதிரொலியே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஆகும். கெடுநோக்குத்துடன் செய்யப்படும் இத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது தமிழர்களின் கடமையாகும். தேவைப்படின் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரிக்கின்றோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறுவது வெளிப்படையான ஹிந்தித் திணிப்பு முயற்சி: கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: