அந்த அறிக்கையால் அதானி குழுமம் சுமார் ரூ.12 லட்சம் கோடியை இழந்தது. தற்போது அதே போல வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவின் ஷார்ட் ஷெல்லிங் நிறுவனமான வைஸ்ராய் ரிசர்ச் அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 85 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தொழிலதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா குழுமத்தின் தாய் நிறுவனமான வேதாநாத் ரிசோர்ஸ் லிமிடெட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக ஸ்டர்லைட், இந்துஸ்தான் ஜிங்க், பாரத் அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் நிதி ரீதியாக நிலைத்தன்மையுடன் இல்லை என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு ஒட்டுண்ணி தாய் நிறுவனம் என குறிப்பிட்டுள்ள வைஸ்ராய், செத்து கொண்டிருக்கும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் பணத்தை எடுத்துக் கொண்டு தொடர்ந்து தாக்குபிடிப்பதாக கூறி உள்ளது.
இந்த கொள்ளையால் வேதாந்தா நிறுவனத்தின் அடிப்படை மதிப்பு சுரண்டப்படுவதாகவும், வேதாந்தா லிமிடெட்டின் புதிய திட்டங்களுக்காக என வாங்கப்படும் கடனை வைத்து வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் கடன்கள் அடைக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளது. இதனால், நீண்டகாலம் இந்த நிறுவனங்கள் தாக்குபிடிக்க முடியாது என்றும் அது கடன் வழங்குநர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடன் வாங்கிய தொகையில் முதலீட்டாளர்களுக்கு அதிகமான டிவிடென்ட் கொடுத்து முழு தோல்வியை மறைக்க வேதாந்தா குழுமம் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது வேதாந்தா குழுமத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* ஆதாரமற்றது வேதாந்தா மறுப்பு
வைஸ்ராய் ரிசர்ச் குற்றச்சாட்டுகளை வேதாந்தா குழுமம் மறுத்துள்ளது. இந்த அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்றும், வேதாந்தா குழுமத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளது. தங்களை தொடர்பு கொள்ளாமல் இந்த அறிக்கையை வைஸ்ராய் நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும், பொது வெளியில் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து திரித்து தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் வேதாந்தா குழுமம் குற்றம்சாட்டி உள்ளது. ஆனாலும், வைரஸ்ராய் அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் வேதாந்தா குழும பங்கு நேற்று 6 சதவீத வீழ்ச்சியை கண்டன. பிற்பகலில் அதன் வீழ்ச்சி 3.5 சதவீதமாக இருந்தது.
The post கடன் வழங்குநர், முதலீட்டாளர்களுக்கு ஆபத்து வேதாந்தா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது: அமெரிக்க ஆய்வு நிறுவனம் பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.
