திருப்பதி கோயிலில் பக்தர்கள் திடீர் மோதல்: கற்கள் வீசி தாக்கியதில் 2 ஊழியர்கள் காயம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிபாரிசு கடிதங்கள் மூலம் தங்கும் அறைகள் பெற வரிசையில் காத்திருந்தபோது திடீரென மோதல் ஏற்பட்டது. கற்களை வீசியதில் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தேவஸ்தானம் சார்பில் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த அறைகளில் பக்தர்கள் கட்டணம் செலுத்தியும், சிபாரிசு கடிதங்கள் மூலம் அறைகள் ஒதுக்கீடு பெற்றும் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி திருமலையில் உள்ள எம்.பி.சி.யில் 34 அறைகள் ஒதுக்கீடு செய்யும் கவுன்டரில் நேற்றுமுன்தினம் சிபாரிசு கடிதம் மூலம் அறை ஒதுக்கீட்டிற்காக சில பக்தர்கள் காத்திருந்தனர்.

அப்போது வரிசையில் முந்திச்செல்வது தொடர்பாக விஜயவாடாவை சேர்ந்த முனிசங்கரய்யா, ரவி பிரசாத் மற்றும் திருப்பதியை சேர்ந்த மோகன்கிருஷ்ணா ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். திடீரென கற்கள் வீசினர். இதில் அங்கிருந்த 2 ஊழியர்கள் காயமடைந்தனர்.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஆதார் அட்டைகள் முடக்கப்படும்
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘திருமலையின் புனிதத்தை பாதுகாப்பது அனைத்து பக்தர்களின் பொறுப்பு. திருமலையில் கூட்டம் குறைவாக இருக்கும்போது அனைவருக்கும் அறைகள் கிடைக்கும். பரிந்துரை கடிதங்களுடன் வந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வருத்தமளிக்கிறது. இனி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் பக்தர்களின் ஆதார் அட்டைகள் முடக்கப்படும். இதனால் வருங்காலத்தில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்’ என்றனர்.

The post திருப்பதி கோயிலில் பக்தர்கள் திடீர் மோதல்: கற்கள் வீசி தாக்கியதில் 2 ஊழியர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: