திருப்பூரில் பயங்கரம் காஸ் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, எம்ஜிஆர் நகர் அடுத்த புளியமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தாராதேவி (50). இவர் வீட்டருகில் தனக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளால் ஆன 42 வீட்டை அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார். மேலும் ஓடுகளால் ஆன வீட்டையும் வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அங்கிருந்த வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ மளமளவென பரவியது. தொடர்ந்து அங்கிருந்த தகர கொட்டகைகளால் ஆன 42 வீடுகளும் தீக்கிரையாகி தரைமட்டமானது. வீட்டில் இருந்த உடைமைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு, வடக்கு தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மற்ற வீடுகளில் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி காலி இடத்தில் வைத்தனர். பகல் நேரம் என்பதால் குடியிருப்பு வாசிகள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post திருப்பூரில் பயங்கரம் காஸ் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம் appeared first on Dinakaran.

Related Stories: