கோட்சே வழியில் மாணவர்கள் சென்று விடக்கூடாது ஓரணியில் நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது: திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: கோட்சே வழியில் மாணவர்கள் சென்று விடக்கூடாது. மாணவர்களாகிய நீங்கள் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என திரண்டு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என திருச்சியில் நடந்த கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜாமல் முகமது கல்லூரிக்கு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. கல்லூரிக்கு வந்த முதல்வருக்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு, ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அதுமட்டுமல்ல, ஆய்வு கூட்டம், அரசு பணி என தொடர்ந்து பிசியாக இருந்தாலும், உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கின்றபோது எனக்கு உத்வேகம் வந்துவிடுகிறது. அதிலும் மாணவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால், உடனே ஓகே சொல்லிவிடுவேன். இப்போது கூட, திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

ஒற்றுமையும், சகோதரத்துவமும் எப்படி வலுப்பட வேண்டும் என்று நாட்டிற்கு வழிகாட்டும் நிறுவனமாக இந்த கல்லூரி இருக்கிறது. இங்கு உங்களுக்குள் உருவாகும் நட்பு எல்லா காலத்திற்கும் தொடர வேண்டும். கல்லூரி நட்பு, கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும். அது இந்த சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும். ஏனென்றால், இந்த கல்லூரியை உருவாக்கிய ஹாஜி ஜமால் முகமது சாஹிப், ஜனாப் காஜா மியான் ராவுத்தர் ஆகியோர் இப்படிப்பட்ட நல்லிணக்கம் உருவாகி, இந்த பகுதியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களெல்லாம் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்தார்கள். இரண்டு வள்ளல்களும் காந்தி வழியை கடைப்பிடித்தவர்கள். காந்திவழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று நமக்கான பல வழிகள் இருக்கிறது. மாணவர்களாகிய நீங்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது.

மாணவர்களாகிய நீங்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என திரண்டு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை, மாணவர்களுக்கு நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்று பேசுகிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டின் தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சி தான் முக்கியம். அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக நாம் நினைப்பது, அறிவு செல்வம் தான், அதனால் தான் கல்விக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். இங்கு ஏராளமான மாணவர்கள் இருக்கிறீர்கள்.

நம்முடைய அரசு செய்துகொண்டு இருக்கும் சாதனைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் நம்முடைய மோட்டோ, இதுதான் திராவிட மாடல் கடந்தகால படிப்பினைகளின் நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு எதிர்காலம் வளமாக அமைய வேண்டும். அந்த எதிர்காலம் என்பது நீங்கள் தான், கல்வி நமக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது. ‘இன்னார் தான் படிக்கவேண்டும்’ என்று இருந்ததை மாற்றி, இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறி கொண்டிருக்கிறோம்.

சமூகநீதி போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு. மீண்டும் சொல்கிறேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவர்களான நீங்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று திரள வேண்டும், நன்றாக படித்து மேலும் மேலும் உயர வேண்டும். அதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் துணை நிற்பான். அனைவருக்கும் நன்றி, என்னை மனதளவில் உங்கள் வயதிலேயே வைத்திருக்க உதவுகின்ற மாணவர்களுக்கு சிறப்பு நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

* 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இஸ்லாமிய சகோதரர்களின் அரசியல் உரிமைகளையும் காப்பாற்றும் இயக்கமாக திராவிட முன்னேற்ற கழகம் எந்நாளும் இருக்கும், இது நான் உங்களுக்கு தரும் உறுதி. கல்விதான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து. அதை மாணவர்களுக்கு கொடுப்பதோடு திறன் மேம்பாட்டை வளர்க்கவும், அதற்கேற்ற வசதிகளை வழங்கவும், திராவிட மாடல் அரசு தயாராக இருக்கிறது. அடுத்து, இளைய சமுதாயத்தை அறிவு சமூகமாக வளர்க்க 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் தரப்போகிறோம்’ என்றார்.

* திருவாரூரில் 6 கி.மீ ரோடு ஷோ
திருச்சியில் இருந்து கார் மூலம் மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பவித்திரமாணிக்கம் கடைதெரு, துர்க்காலயா சாலை, கமலாலயம் வடகரை, மேல வீதி, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் சாலை வழியாக 6 கி.மீ தூரத்திற்கு ‘ரோடு ஷோ’ மூலம் நடைபயணமாக சென்று பொது மக்களை சந்தித்தார். அப்போது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மகளிர் குழுவினர், வர்த்தகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ரோடுஷோவின்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் தஞ்சாவூர் சாலை ஜி.டி நகரில் மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5 அடி உயர கலைஞர் முழுஉருவ வெங்கல சிலையினை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சன்னதி தெரு இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு இரவு தங்குகிறார். இன்று (10ம்தேதி) காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

The post கோட்சே வழியில் மாணவர்கள் சென்று விடக்கூடாது ஓரணியில் நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது: திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: