தொங்கு பாலம் அறுந்து ஏற்கனவே 141 பேர் பலியான நிலையில் குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து 11 பேர் பலி: லாரி, கார், வேன் என சரசரவென ஆற்றுக்குள் விழுந்த பரிதாபம்; பலர் படுகாயம், மீட்பு பணி தீவிரம்

வதோதரா: குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து லாரி, கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில் 11 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவில் உள்ள முஜ்பூரில் அமைந்துள்ள இந்தப் பாலம், முஜ்பூரை ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பீராவுடனும், மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடனும் இணைத்தது. மஹிசாகர் ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள், ஒரு ஆட்டோரிக்‌ஷா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை சரசரவென ஆற்றில் விழுந்தன. லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நின்றது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலியானார்கள்.

மேலும் படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வதோதராவின் காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த் பலி எண்ணிக்கை 11 ஆனதை உறுதிப்படுத்தினார். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் ஆற்றில் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வரும் நிலையில், மேலும் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விபத்து மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வதோதரா கலெக்டர் அனில் தமேலியா கூறுகையில்,’ பாலத்தின் ஒரு பகுதி திடீரென வளைந்ததால் இரண்டு லாரிகள், ஒரு வேன், ஒரு பிக்அப் வேன் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஆகியவை ஆற்றில் விழுந்தன. இது ஆற்றின் ஆழமான பகுதி அல்ல, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த நேரத்தில் பாலத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இருந்தன. ஆனால் அவை ஆற்றில் விழுந்தனவா என்பது எங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. மீட்புப் பணிகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருவதால், பலியானவர்களின் அடையாளங்களை இன்னும் நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.40 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம் கடந்த ஆண்டு பழுதுபார்க்கப்பட்டது. சாலை மற்றும் பாலங்கள் துறையின் நிர்வாகப் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடிந்ததும் பாலத்தின் விவரங்களை நாங்கள் ஆராய்வோம்’ என்றார்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், அனைத்து சிகிச்சைக்கான உதவிகளும் மாநில அரசால் செய்யப்படும் என்று அறிவித்துள்ள அவர் மேலும் தொழில்நுட்ப நிபுணர்கள் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தப் பாலத்தை உரிய முறையில் பராமரிக்காமலும், அதன் உறுதித்தன்மையை சோதிக்காமலும், அதிகப்படியான மக்களை அனுமதித்ததே அந்த பேரிழப்புக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. அந்த சோக சம்பவத்தின் வடுக்கள் மக்கள் மனதிலிருந்து இன்னமும் அகலாத நிலையில்,நேற்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்திருப்பது உள்கட்டமைப்பு பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதை காட்டுவதாக குஜராத் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

* மிகவும் வருத்தமாக உள்ளது: பிரதமர் மோடி
குஜராத் துயர சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

* இதுதான் குஜராத் மாடல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ அமித் சாவ்தா கூறுகையில்,’ இதுதான் குஜராத் மாடல். இந்த குஜராத் மாடலின் பின்னால் உள்ள ஊழலை இந்த பாலம் உடைந்தது பிரதிபலிக்கிறது. இதனால் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் குஜராத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களில் முழுவதும் ஊழல் நிரம்பி வழிகிறது. இந்த பாலத்தின் நிலைமை குறித்து அரசுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைய சம்பவம் மற்றும் உயிரிழப்புகளுக்கு மாநில அரசுதான் பொறுப்பு. குஜராத்தில் பல பழைய, சேதமடைந்த பாலங்கள் உள்ளன, ஆனால் மாநில அரசு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை’ என்றார்.

* கிட்டத்தட்ட 900 மீட்டர் நீளமுள்ள கம்பீரா பாலம் 23 தூண்களைக் கொண்டுள்ளது மற்றும் குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கிறது. இது 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
* இரண்டு தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் 10 முதல் 15 மீட்டர் நீளமுள்ள பகுதி இடிந்து விழுந்தது.

The post தொங்கு பாலம் அறுந்து ஏற்கனவே 141 பேர் பலியான நிலையில் குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து 11 பேர் பலி: லாரி, கார், வேன் என சரசரவென ஆற்றுக்குள் விழுந்த பரிதாபம்; பலர் படுகாயம், மீட்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: