ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் பங்கேற்றோருக்கு வாழ்த்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அமைப்புகளின் சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம், மறியல் போராட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது.

தமிழகத்தில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பி.ஹெச்.இ.எல், சேலம் ஸ்டீல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பவர் கிரிட் கார்ப்பரேஷன், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள், வங்கி, இன்சூரன்ஸ், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்சார வாரியம் போன்ற துறைகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவை, திருவள்ளூர், மதுரை புறநகர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களிலும் வேலை நிறுத்தம் நடந்துள்ளது. அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, ஐ.சி.டி.எஸ் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் கணிசமாக பங்கேற்றனர்.

தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும், நகரங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் பங்கேற்றோருக்கு வாழ்த்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: