யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் பழைய வீடியோவால் சர்ச்சை; தேசத்துரோக வழக்கில் கைதானவர் அரசு விழாவில் எப்படி பங்கேற்றார்?.. கேரள பாஜக மாஜி அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு

* இமாச்சலப் பிரதேச காங்கிரசும் பரபரப்பு புகார்

புதுடெல்லி: தேசத்துரோக வழக்கில் கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் பழைய வீடியோ வெளியாகி வரும் நிலையில், கேரள பாஜக மாஜி அமைச்சர் மீது கேரள கட்சிகளும், பாஜக மீது இமாச்சலப் பிரதேச காங்கிரசும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட ஆறு பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா, கடந்த 2023ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றபோது, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டானிஷ் என்பவருடன் பழகியுள்ளார். பின்னர், டானிஷ் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த ஷாகிர் என்கிற ராணா ஷாபாஸ் என்பவருடன் ஜோதிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்கள் வழியாகப் பேசி, இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பியதாக ஜோதி மல்ஹோத்ரா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர் தனது பயண அனுபவங்களை ‘இந்தியப் பெண் பாகிஸ்தானில்’ என்ற தலைப்பில் தொடர் வீடியோக்களாகப் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பான பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஜோதி மல்ஹோத்ரா, வாகா-அட்டாரி எல்லை வழியாகப் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன், பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை வீரரிடம் தனது பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு, ‘நான் அரியானா பாஜகவைச் சேர்ந்தவர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சி, ஜோதியின் யூடியூப் தொடரிலிருந்து எடுக்கப்பட்டது என்றும், இதனை இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ பழையது என்றாலும், தற்போது வைரலாகி, அவர் தனது பயணத்திற்கு ஆளுங்கட்சியின் பெயரைப் பயன்படுத்தினாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதேபோல் கேரளாவில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவின்போது, அப்போதைய ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளீதரனுடன், ஜோதி மல்ஹோத்ரா இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விழா, அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமேயான நிலையில், ‘தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதி எப்படிப் பங்கேற்றார்?’ என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இளைஞரணித் தலைவர் பி.கே.ஃபிரோஸ் கேள்வி எழுப்பினார். இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்த வி.முரளீதரன், ‘வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவின்போது பலர் என்னிடம் பேசினார்கள்; வீடியோ எடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த யூடியூபர். அவர் எனது அழைப்பின் பேரில் இங்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் எனது பெயர் தேவையின்றி இழுக்கப்படுகிறது’ என்று கூறி, மாநில அரசின் மீது பழி சுமத்தினார். முன்னதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜோதி மல்ஹோத்ரா கேரள சுற்றுலாத் துறையின் அழைப்பின் பேரில், மாநில அரசு விருந்தினராகவே கேரளாவுக்கு வந்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக அழைக்கப்படும் சமூக ஊடக பிரபலங்களின் பட்டியலில் ஜோதியின் பெயர் இருந்ததும், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு ஆகிய இடங்களுக்கு அவர் சுற்றுலாத் துறையின் செலவில் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இவ்விசயத்தில், ‘பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இடதுசாரி அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா?; முதல்வர் பினராயி விஜயனின் மருமகனான சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் பதவி விலக வேண்டும்; அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மாநில பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே பெரும் மோதலாக வெடித்துள்ளது.

The post யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் பழைய வீடியோவால் சர்ச்சை; தேசத்துரோக வழக்கில் கைதானவர் அரசு விழாவில் எப்படி பங்கேற்றார்?.. கேரள பாஜக மாஜி அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: