ஊட்டியில் பகலில் ஹாயாக உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: ஊட்டி அருகே பகல் நேரத்தில் கரடி உலா வந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று பிற்பகல், ஊட்டி அடுத்த தேவர் சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி உலா வந்தது. திடீரென அந்த கரடி அங்கிருந்து வெளியேறி சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்து குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றது.

இதனை அங்கு பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் சிலர் பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். பொதுமக்கள் நிற்பதை பார்த்த கரடி, அவர்களை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். குடியிருப்பு பகுதியிலேயே கரடி நடமாடுவதால், அதனை வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஊட்டியில் பகலில் ஹாயாக உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: