திருமலை: வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற காதலியை கழுத்தறுத்து கொன்ற வாலிபரும் தற்கொலைக்கு முயன்றார். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பாபிலி பகுதியைச் சேர்ந்தவர் நிவாசராவ். இவரது மனைவி ஈஸ்வரம்மா, மகள் ரம்யா (23). இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், படன்செருவுக்கு குடிபெயர்ந்து அங்குள்ள பண்ட்லகுடா கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ரம்யா கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். மேடக் மாவட்டம், மன்னேப்பள்ளியை சேர்ந்தவர் பிரவீன் (25). படாஞ்சேருவை சேர்ந்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ரம்யா-பிரவீன் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களாக காதலிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்ற நிலையில் ரம்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த பிரவீன், அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ரம்யாவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு ரம்யா படிப்பு முடிந்ததும் திருமணம் பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரவீன், தான் வைத்திருந்த கத்தியால் ரம்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரம்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீனும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் ரம்யாவின் தாய் ஈஸ்வரம்மா வீட்டுக்கு வந்தார். நீண்ட நேரம் தகவை தட்டியும் திறக்கவில்லை. இதையறிந்த நிவாசராவ் விரைந்து வந்து வீட்டின் சுவர் ஏறி குதித்து பார்த்தபோது படுக்கை அறையில் ரம்யா சடலமாக கிடந்தார்.
பிரவீன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரம்யாவின் தந்தை நிவாசராவ் அளித்த புகாரின் பேரில் ராமச்சந்திரபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பிரவீனும், ரம்யாவும் காதலித்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரவீன், ரம்யாவின் பெற்றோரை சந்தித்து மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டபோது எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது மகளுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் எச்சரித்தனர். மேலும் ரம்யாவுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பிரவீன், ரம்யாவை கொலை செய்துள்ளார் என்று மியாபூர் காவல் உதவி ஆணையர் நிவாஸ்குமார் தெரிவித்தார். நேற்றும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் ஆத்திரம்: காதலி கழுத்தறுத்து கொலை; காதலனும் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.
