புதுச்சத்திரம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனத்துடன் தானியங்கி கருவி அமைப்பு

*துணை இயக்குனர் நேரில் ஆய்வு

சேந்தமங்கலம் : புதுச்சத்திரம் வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் கூடிய தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுச்சத்திரம் வட்டாரம், நவணி கிராமத்தில் விவசாயி சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான 1.16 எக்டர் விவசாய நிலத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக, நுண்ணீர் பாசனம் திட்டத்துடன் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த திட்டத்தின் கீழ், தானியங்கி கருவி அமைப்பதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு ரூ.22ஆயிரம் மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.18ஆயிரம் மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயி சுப்பிரமணியத்திற்கு 1.16 எக்டர் பரப்பிற்கு ரூ.24 ஆயிரம் மானியமாக வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு, தானியங்கி கருவி நிறுவப்பட்டுள்ளது.

தானியங்கி சொட்டு நீர் பாய்ச்சுவது மிகவும் எளிமையாகவும், வேலை ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள தருணத்தில், மிகவும் உபயோகமாக இருக்கும். தண்ணீரின் பயன்பாடும் மிகவும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி மூலமாக எந்த இடத்திலும் இருந்து இயக்குவதற்கு மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கவின், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post புதுச்சத்திரம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனத்துடன் தானியங்கி கருவி அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: