இயக்குநர் பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அருணா. மேலும் இவர் முதல் மரியாதை, கரிமேடு கருவாயன், பெண்ணின் வாழ்க்கை, நாடோடி ராஜா, ஆனந்த ராகம், சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில் கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தாவுடன் நடிகை அருணா வசித்து வருகிறார். மன்மோகன் குப்தா வீடு, பங்களாக்களில் உள்கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மன்மோகன் குப்தாவின் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள அவரது சொகுசு வீடு அலுவலகங்களில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சோதனையில் ஏதாவது ஆவணங்கள் சிக்கினால் அதனடிப்படையில் இவர்களுக்கு சொந்தமாக வேறு ஏதாவது அலுவலகங்கள் வீடுகள் இருந்தால் அங்கேயும் சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.
