பக்கிரிமானியம் கிராமத்தில் 13ம் தேதி கும்பாபிஷேகம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை

*சமாதான கூட்டத்தில் வலியுறுத்தல்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தில் வரும் 13ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்து வலியுறுத்தப்பட்டது.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் பக்கிரிமானியம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்வகணபதி, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இரு தரப்பினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிய வந்தது.

இதை முன்னிட்டு நேற்று ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் இளஞ்சூரியன் தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி, மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் தங்கம், கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி மற்றும் பக்கிரி மானியம் கிராமத்தைச் சார்ந்த இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில் கும்பாபிஷேகம் தொடர்பாக எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுத்தக் கூடாது என்றும், இரு தரப்பினரும் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு வட்டாட்சியரால் இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த சேகர் வகையறாவால் கலைமணி வகையறாவிற்கும், கலைமணி வகையறாவினால் சேகர் தரப்பினருக்கும், உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என்றும், மீறி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்பட்டால் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது கோயில் கோபுரம் மீது குருக்கள் தவிர பொதுமக்கள் யாரும் ஏறக்கூடாது என வட்டாட்சியரால் அறிவுறுத்தப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

The post பக்கிரிமானியம் கிராமத்தில் 13ம் தேதி கும்பாபிஷேகம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: