நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர் மற்றும் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட அந்தரபுரம் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு வழங்குவதை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க அவர்களின் பகுதிகளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று முகாம்கள் நடத்தி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தினை வரும் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ளார்.
கூலித்தொழில், தூய்மை பணியாளர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், செங்கல் சூளை உள்ளிட்ட தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வழிவகை செய்கிறது.
தன்னார்வலர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம்தேடி கல்வி பணியாளர்கள், சுய உதவிகுழுவினர், நகர்புற களப்பணியாளர்கள் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2ம் வார்டுகளிலும், கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட வார்டு 1 மற்றும் 2, திருவட்டார் பேரூராட்சி பகுதிகளிலும், தோவாளை, ஞாலம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும், கிள்ளியூர் பேரூராட்சி பகுதிகளிலும், விளவங்கோடு ஊராட்சி பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று, பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும், அதற்கான தகுதிகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் விளக்கி கூறுவதோடு, மடிப்பேடுகள் மற்றும் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். முதல்நாளில் 275 வீடுகளுக்கு சென்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மடிப்பேடு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர், தோவாளை தாலுகா ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட அந்தரபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மடிப்பேடு மற்றும் விண்ணப்பங்கள் வழங்கி, வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கி கூறுவதை கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்ேபாது பொதுமக்களிடம் அவர்களுடைய தேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு, அதற்கான திட்டங்கள், அத்திட்டங்களுக்கு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து எடுத்துரைத்தத்தோடு, தவறாமல் முகாமில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முகாமில் நடைபெறும் மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொண்டு பயனடையுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பத்ஹூ முகம்மது நசீர், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் வளர்மதி, தோவாளை தாசில்தார் கோலப்பன், தன்னார்வலர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம்தேடி கல்வி பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர், களப்பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
15ம் தேதி முகாம்கள் எங்கே?
குமரி மாவட்டத்தில் வரும் 15.07.2025 அன்று கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 1, 2 பகுதிகளுக்கு ஆளூர் மாநகராட்சி சமூக நல கூடத்திலும், அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட கன்னியாகுமரி நகராட்சி வார்டு 1, 2 பகுதிகளுக்கு கன்னியாகுமரி நகராட்சி அலுவலக வளாகத்திலும், திருவட்டார் பேரூராட்சி பகுதிகளுக்கு திருவரம்பு குருவிக்காடு புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்திலும், தோவாளை தாலுகா தோவாளை மற்றும் ஞாலம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு அந்தரபுரம் சமுதாய நலக்கூடத்திலும், கிள்ளியூர் தாலுகா கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு திப்பிறமலை ஸ்ரீ முத்தாரம்மன் கலையரங்கத்திலும், விளவங்கோடு வட்டம் விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பாலவிளை புனித அந்தோணியார் சமூகநலக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
The post ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விண்ணப்ப விநியோகம் முறையாக நடைபெறுகிறதா? appeared first on Dinakaran.
